நாடுகடந்த வணிக நிறுவன வலையமைப்பைக் கட்டியெழுப்ப இலங்கை ஆதரவளிக்கும்

221 0

உள்ளகப் பிராந்திய முதலீடுகளை ஊக்குவிக்கும் வகையில், நாடுகடந்த வணிக நிறுவனங்களின் வலையமைப்பைக் கட்டியெழுப்புவதற்கான இலங்கையின் முழுமையான ஆதரவையும் வெளிப்படுத்துவதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

வியாழக்கிழமை (09) இணையவழி மெய்நிகர் முறையில் நடைபெற்ற பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா முன்முயற்சியின் (பிம்ஸ்டெக்) 19ஆவது அமைச்சர்கள் கூட்டத்தில் உரையாற்றும் போதே வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி இதனைத் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் ,

உலகப் பொருளாதார வளர்ச்சியின் பாதை ஆசியாவை நோக்கி நகர்வதால், பிம்ஸ்டெக் நாடுகளின் வர்த்தகம் மற்றும் முதலீட்டுக் கூறுகள் தொடர்புடையதாக இருப்பதற்காக புத்துயிர் பெற வேண்டும்.

வர்த்தகம் மற்றும் முதலீட்டின் ஓட்டத்தை மேம்படுத்துவதற்கு வலுவான மற்றும் ஆற்றல்மிக்க தனியார் துறை வலையமைப்பை உருவாக்குவதற்கான ஒரு வழித்தடமாக மாறுவதற்காக பிம்ஸ்டெக் முன்னணி வகிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, ஒவ்வொரு நாட்டினதும் ஒப்பீட்டு நன்மைகளை மையமாகக் கொண்டு, பிராந்திய வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான கூட்டு முயற்சிகளை வலுப்படுத்த வேண்டியது அவசியமாகும்.

இந்தச் சூழலில், வர்த்தகம் மற்றும் முதலீட்டுத் துறைகளில் முன்னெச்சரிக்கையுடன் பணியாற்றுவதற்கான இலங்கையின் உறுதிப்பாட்டை  மீண்டும் வலியுறுத்துகின்றேன். மேலும், அனைவருக்கும் உருமாறும் பொருளாதார வளர்ச்சியை உருவாக்குவதற்காக, உள்ளகப் பிராந்திய முதலீடுகளை ஊக்குவிக்கும் வகையில், நாடுகடந்த வணிக நிறுவனங்களின் வலையமைப்பைக் கட்டியெழுப்புவதற்கான இலங்கையின் முழுமையான ஆதரவையும் வெளிப்படுத்துகின்றோம் என்றார்.

பிம்ஸ்டெக் பாங்கொக் விஷன் 2030, கடல்சார் போக்குவரத்து இணைப்புக்கான ஒப்பந்தம் மற்றும் பிம்ஸ்டெக்கின் தலைசிறந்த நபர்களின் குழுவை நிறுவுதல் போன்ற முக்கியமான நிகழ்ச்சி நிரல்கள் தொடர்பில் இந்தக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.

தாய்லாந்தின் தலைமைத்துவத்தின் கீழ், பிம்ஸ்டெக் உறுப்பு நாடுகளான பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, நேபாளம், மியன்மார் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர்கள் பங்கேற்ற அமைச்சர்கள் கூட்டம் தாய்லாந்தின் துணைப் பிரதமர் மற்றும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சரின் தலைமையில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.