இந்த ஆண்டு வெயிலின் அளவு அதிகமாக இருக்கும்!

461 0

தண்ணீர் பஞ்சம் ஆபத்துக்கு மத்தியில், தமிழகத்தில் இந்த ஆண்டு வெயிலும் கூடுதலாக சுட்டெரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் முன்னெச்சரிக்கை செய்துள்ளது.

தண்ணீர் பஞ்சம் ஆபத்துக்கு மத்தியில், தமிழகத்தில் இந்த ஆண்டு வெயிலும் கூடுதலாக சுட்டெரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் முன்னெச்சரிக்கை செய்துள்ளது.

தமிழகத்தின் தண்ணீர் தேவைக்கு ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழையைத் தான் நம்பிக்கொண்டிருக்க வேண்டியிருக்கிறது. அந்த நம்பிக்கை இந்த ஆண்டு வீண் போய்விட்டது. பொதுவாக, வடகிழக்கு பருவமழை காலம் என்பது அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரையிலான காலகட்டம் ஆகும்.

இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை பொய்த்துப்போய்விட்டது. 65 சதவீதம் அளவுக்கு மழை குறைவாகவே பெய்துள்ளது. இதன் காரணமாக, அணைகள், ஏரிகளில் போதிய அளவு நீர் இருப்பு இல்லை. விவசாயமும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், குடிநீர் பஞ்சமும் கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே தலை தூக்க தொடங்கி விட்டது.

தண்ணீர் பஞ்சம் ஒரு பக்கம் அச்சுறுத்திக் கொண்டிருக்கின்ற நிலையில், இந்த ஆண்டு கோடை காலத்தில் வெயிலும் சுட்டெரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் முன்னெச்சரிக்கை செய்துள்ளது.

கடந்த ஆண்டு 115 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தமிழகத்தில் வெயில் வாட்டி வதைத்தது. பல நகரங்களில் வெயில் சதம் (100 டிகிரி) அடித்தது. ஜூலை மாதம் வரை வெயிலில் உக்கிரம் குறையவே இல்லை.

இந்த ஆண்டும் வெயில் தற்போது இருந்தே அதிகரிக்க தொடங்கிவிட்டது. ஏற்கனவே பருவமழையும் பொய்த்து போனதால், கடுமையான அளவுக்கு பஞ்சம் ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. அதை நிரூபிக்கும் வகையில், கடந்த சில வாரங்களாக வெப்பக்காற்று வீசத் தொடங்கிவிட்டது. ஒரு சில நகரங்களில் வெயில் 100 டிகிரியை தொட்டுப் பார்க்கிறது.

இப்போதே இப்படி என்றால், ஏப்ரல் – மே மாதங்களில் இன்னும் வெயிலின் தாக்கம் இன்னும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. அதை நிரூபிக்கும் வகையில் இந்திய வானிலை ஆய்வு மைய அறிக்கை முன்னெச்சரிக்கை செய்துள்ளது. வெயில் தொடர்பாக, இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

இந்தியாவில் 1901-ம் ஆண்டுக்கு பிறகு அதிகபட்ச வெயில் அளவு கடந்த ஆண்டு (2016) பதிவானது. 1961-ம் ஆண்டு முதல் 1990-ம் ஆண்டு வரை தரைவழி வெப்ப காற்றின் அளவு 0.91 டிகிரி என்ற அளவில் இருந்து வந்தது. ஆனால், கடந்த ஆண்டு மார்ச் முதல் மே மாதம் வரையிலான காலக்கட்டத்தில் வெப்ப காற்றின் அளவு 1.36 டிகிரி என்ற அளவில் பதிவானது. இது 1901-ம் ஆண்டுக்கு பிறகு பதிவான அதிகபட்ச வெயில் அளவில் 2-வது பெரிய அளவீடாக கருதப்படுகிறது.

இந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை வெப்ப காற்றின் அளவு 0.67 டிகிரி என்ற அளவில் இருக்கும் என்று முதலில் கணிக்கப்பட்டிருந்தது. ஆனால், இப்போதே வெப்ப காற்றின் அளவு 1 டிகிரி என்ற அளவில் இருக்கிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

எனவே, வெயிலின் தாக்கம் இப்போதே இந்த அளவுக்கு அதிகமாக இருப்பதால், ஏப்ரல் – மே மாதங்களில் வெயிலின் அளவு இன்னும் அதிகரிக்கும் என்றே தெரிகிறது.

அதே நேரத்தில், சற்று ஆறுதல் அளிக்கும் வகையில், தென் மற்றும் வட கடலோர பகுதிகளில் அடுத்த 2 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.