வடக்கு மாகாண மக்கள் உள்ளக பொறிமுறைக்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளமை அப்பட்டமான பொய்யாகும்,ஆணைக்குழுவின் பொய்யான கருத்திற்கு இந்த உயரிய சபை ஊடாக கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்த நாட்டில் நீதி இல்லை என்பதற்கு குருந்தூர் மலை விவகாரம் சிறந்த எடுத்துக்காட்டு இதனால் தான் பாதிக்கப்பட்ட எம்மவர்களுக்காக சர்வதேச நீதி பொறிமுறையை கோருகிறோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தின் புதன்கிழமை(08) இடம்பெற்ற கலால் சட்டம் ஒழுங்கு விதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கடந்த பெப்ரவரி மாதம் வடக்கு மாகாணத்திற்கு விஜயம் மேற்கொண்டு பல்வேறு தரப்பினரை சந்தித்து ஜனாதிபதியிடம் மதிப்பீட்டு அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.
வடக்கு மக்கள் உள்ளக பொறிமுறையிலான விசாரணையை ஏற்பதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அப்பட்டமான பொய்யை குறிப்பிட்டுள்ளதையிட்டு கவலையடைவதுடன், இந்த உயரிய சபை ஊடாக கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.
இலங்கை இராணுவத்தின் செயற்பாடுகளினால் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்கள் உள்ளக பொறிமுறையை ஒருபோதும் ஏற்கவில்லை,ஏற்றுக்கொள்ளப் போவதுமில்லை, கடந்த 40 ஆண்டு காலமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்கள் பல உரிமைகளை இழந்துள்ளார்கள், ஆகவே வெளியக பொறிமுறை ஊடாகவே சிறந்த ஏற்றுக்கொள்ள கூடிய தீர்மானத்தை பெற்றுக்கொள்ள முடியும்.
இந்த நாட்டில் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்ந்து தமது உரிமைக்காக போராடிக் கொண்டிருக்கும் நிலையில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அப்பட்டமான முறையில் அரசாங்கத்திற்கு சார்பாக அறிக்கை சமர்ப்பித்துள்ளமை மிக மோசமான தன்மையை வெளிப்படுத்தியுள்ளது, இதற்கு எமது கடும் கண்டனத்தை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறோம்.
2022 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 51.1 பிரேரணை ஊடாக உள்ளக பொறிமுறை விசாரணையை தாம் எதிர்ப்பதாக இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.இலங்கை விவகாரத்தில் சர்வதேசத்தை ஏமாற்றும் தன்மையில் தான் அரசாங்கம் செயற்படுகிறது.
யுத்தக் குற்றங்கள் ஏதும் இலங்கை இராணுவம் செய்யவில்லை என்றால் இலங்கை ஏன் சர்வதேச விசாரணைக்கு அச்சமடைகிறது.மனித குலத்துக்கு எதிரான குற்றங்களை செய்த தரப்பினர் நீதிபதியாக இருந்து செயற்படும் போது எவ்வாறு நியாயத்தை பெற்றுக்கொள்ள முடியும்.
இந்த நாட்டில் நீதி என்பதொன்று கிடையாது. இதற்கு சிறந்த உதாரணமாக குறுந்தூர் மலை விவகாரத்தை குறிப்பிட முடியும். குறுந்தூர் மலையில் விகாரை அமைக்கும் பணிகளுக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ள போதும் ஒரு தரப்பினர் நீதிமன்ற தீர்மானத்துக்கு எதிராக செயற்படுகிறார்கள், ஆகவே இந்த நாட்டில் எவ்வாறு உரிமை இழந்த தமிழ் மக்கள் நியாயமான தீர்வை பெற்றுக்கொள்ள முடியும், இதன் காரணமாகவே சர்வதேச நீதி பொறிமுறையை கோருகிறோம் என்றார்.

