ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சி தலைவர் எவரேனும் வர வேண்டும்: ஆர்ப்பாட்டக்காரர்கள் எச்சரிக்கை

270 0

காணாமல் போனோரின் உறவினர்களால் வவுனியாவில் சுழற்சி முறையில் முன்னெடுக்கும் உணவு தவிர்ப்பு போராட்டம் இன்று ஆறாவது நாளாகவும் தொடர்கிறது.

கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோரை தேடியறியும் சங்கத்தால்  இந்த சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக தீர்க்கமான முடிவை தெரிவிக்க வேண்டும்,

அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும், பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படவேண்டும் என்ற மூன்று கோரிக்கைகளை முன்வைத்து இந்தப்  போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

கடந்த மாதம் சாகும் வரையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட தமக்கு, அலரி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது எந்தவித பலனும் கிடைக்கவில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், தமது கோரிக்கைக்கு ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சி தலைவர் ஆகியோரில் யாரேனும் ஒருவர் நேரில் வந்து உறுதி மொழி வழங்கும் வரையில் போராட்டம் தொடரும் எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் எச்சரித்துள்ளனர்.

இதேவேளை, காணாமல்போனோரின் உறவினர்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டம் குறித்து ஜனாதிபதின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நேற்று முதல் தபால் அனுப்பும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் இன்று 10 ஆவது நாளாகவும் தொடர்கிறது.

கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்றலில் இந்தக் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடயத்தில் இனியும் காலம் தாமதிக்க வேண்டாம்  என வலியுறுத்தி அவர்களின் உறவினர்களால் இந்த தொடர் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது