மாலபேக்கு எதிர்ப்பு தெரிவித்து வடக்கில் மருத்துவர்கள் வேலைநிறுத்த போராட்டம்

374 0
மாலபே தனியார் மருத்துவ நிறுவனத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக வட மாகாண வைத்தியர்கள் நாளை 2 ம் திகதி வியாழ க்கிழமை  24 மணி நேர வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
எனினும் தெல்லிப்பளை புற்று நோய் வைத்தியசாலை மற்றும் ஏனைய வைத்தியசாலைகள் அனைத்திலும் அவசர நோயாளர் சேவைகள் இடம்பெறும் எனவும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் வடமாகாண இணைப்பாளர் வைத்தியர் காண்டீபன்  தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் ,
இது இலங்கை மருத்துவ சேவையின் தராதரம் பற்றிய போராட்டம், தரமற்ற மருத்துவர்களை அரசியல் செல்வாக்குக்காகவும் பணத்துக்காகவும் உருவாக்கி நோயாளர்களின் உயிரை பணயம் வைக்கும் அரசியல் வியாபாரிகளுக்கு எதிரான போராட்டம்.
நோயாளர்களுடன் எமக்கு நீண்ட கால புரிந்துணர்வு உள்ளது. அவர்களின் தேவைகளை இதுவரை காலமும் வழங்கி வந்தோம், இனியும் வழங்கத் தயாராக உள்ளோம். எனவே நோயாளர்கள் எங்கள் நியாயமான கோரிக்கைகளைப் புரிந்து கொள்வார்கள்.
அவசர நோய் அல்லது விபத்துகளின் போது உடனடியாக தயங்காமல் வைத்தியசாலையை நாடுங்கள். அங்கு எமது வைத்தியர்கள் உங்கள் உயிர் காக்க எப்போதும் போலவே தயார் நிலையில் இருப்பார்கள் என குறிப்பிட்டார்.