ஒரு பாலினத் திருமணங்களுக்கு எதிராக பனாமாவின் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அது ஒரு மனித உரிமையோ அடிப்படையோ அல்ல என அந்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மத்திய அமெரிக்க நாடான பனாமாவில், ஒரு பாலினத் தம்பதியினர் பலர் மனுக்களை தாக்கல் செய்ததையடுத்து 2016 ஆம் ஆண்டு முதல் அந்நாட்டு உச்ச நீதிமன்றம் இவ்விடயத்தை ஆராய்ந்து வந்தது.
இந்நிலையில், இது தொடர்பான நீதிமன்றத்தின் தீர்ப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
சமத்துவமான திருமணத்துக்கான உரிமை என்பது ஒரு அபிலாஷை என்பதைவிட அதற்கு மேலானதல்ல. அது மனித உரிமைகள் அல்லது அடிப்படை உரிமைகள் விடயத்துக்கு உட்பட மாட்டாது என அந்நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
வேறு நாடுகளில் செய்துகொள்ளப்பட்ட ஒரு பாலினத் திருமணங்களை பனாமாவில் அங்கீகரிக்குமாறு ஒருபாலினத் தம்பதியினர் கோரியிருந்தனர். அதற்கு நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
தென் அமெரிக்கக் கண்டம் மற்றும் மத்திய அமெரிக்கப் பிராந்திய நாடுகள் அங்கம் வகிக்கும் அமெரிக்க நாடுகளுக்கான மனித உரிமைகள் நீதிமன்றம், எதிர்பால் திருமணத் தம்பதிகளைப் போன்றே ஒரு பாலினத் தம்பதிகளும் ஒரே மாதிரியான உரிமைகளைக் கொண்டவர்கள் என 2018 ஆம் ஆண்டு தீர்ப்பளித்திருந்தது. பனாமாவும் அந்நீதிமன்றத்தில் அங்கம் வகி;கிறது.
எனினும், மத்திய அமெரிக்க நாடுகளில் கொஸ்ட்டா ரிக்கா மாத்திரமே ஒரு பாலினத் திருமணங்களை அங்கீகரித்துள்ளது.

