மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞன் வீதியில் நீர் நிரம்பிய குழியில் விழுந்து பரிதாபமாக மரணம்

191 0

மட்டக்களப்பு – கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அம்பிளாந்துறை வில்லுக்குளம் வீதியில் உள்ள நீர் நிரம்பிய குழியில் வீழ்ந்ததில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் 28 ஆம் திகதி செவ்வாய்கிழமை மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆர்.கே.எம்.பாடசாலை வீதி கல்முனை பிரதேசத்தைச் சேர்ந்த ரீ.கவிசாந் என்பவரே இவ்விபத்தில் பலியானவராவார்.

அம்பிளாந்துறை வில்லுக்குளம் வீதியூடாக உயிரிழந்த இளைஞன் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த நிலையில், குறித்த வீதியில் காணப்பட்ட நீர் நிரம்பிய குழியில் விழுந்துள்ளார்.

குழியில் விழுந்த இளைஞன் காப்பாற்ப்பட்டு மகிழடித்தீவு வைத்தியசாலையில் அமனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

விபத்து இடம்பெற்ற வீதி வருடா வருடம் பெய்து வரும் பருவமழை காலத்தில் நீர் நிரம்பவுதனால் குறித்த வீதியை பொது மக்கள் குறிப்பிட்ட காலங்களில் போக்குவரத்திற்காக பயன்படுத்துவதில்லை என பொலிஸார் மற்றும் திடீர் மரண விசாரணை அதிகாரியின் ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

மட்டக்களப்பு  நீதிமன்ற நீதிவான் பீற்றர் போலின் உத்தரவிற்கமைவான சம்பவ இடத்திற்கு சென்ற மண்டூர்  பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் சடலத்தை பார்வையிட்டதுடன் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

கொக்கட்டிச்சோலை பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.