பிரான்ஸ் தூதுவருக்கு மனித உரிமைகள் ஆணையாளர் விளக்கம்

197 0

நாட்டின் மனித உரிமைகள் நிலவரம் மற்றும் பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ் நீண்டகாலமாகத் தடுத்துவைக்கப்பட்டுள்ள கைதிகள் தொடர்பில் இலங்கைக்கான பிரான்ஸ் நாட்டுத்தூதுவருடன் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தவிசாளர் கலந்துரையாடியுள்ளார்.

இலங்கைக்கான பிரான்ஸ் நாட்டுத்தூதுவர் ஜீன்-ப்ரான்கோஸ் நேற்று  திங்கட்கிழமை கொழும்பில் அமைந்துள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்ததுடன், அங்கு ஆணைக்குழுவின் தவிசாளர் நீதியரசர் ரோஹினி மாரசிங்கவை சந்தித்துக் கலந்துரையாடினார்.

இச்சந்திப்பின்போது நாட்டின் மனித உரிமைகள் நிலைவரம், பொருளாதார நெருக்கடிநிலை, பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ் நீண்டகாலமாகத் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருப்போர் விவகாரம் என்பன தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டதாக மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதுமாத்திரமன்றி கடந்த மாதம் மனித உரிமைகள் ஆணைக்குழு உறுப்பினர்களின் யாழ் விஜயத்தின்போது ஆராயப்பட்ட மற்றும் கண்டறியப்பட்ட விடயங்கள் பற்றியும் இச்சந்திப்பில் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.