நாம் தமிழர் – திமுக மோதல்: 10-க்கும் மேற்பட்டோர் காயம் – சீமான் வேட்பாளருக்கு நோட்டீஸ்

86 0

ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் பிரச்சாரத்தின்போது, திமுக – நாம் தமிழர் கட்சியினரிடையே மோதல் ஏற்பட்டது. ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட வீரப்பன்சத்திரம் பகுதியில், நேற்று இரவு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். கட்சித்தொண்டர்கள், நிர்வாகிகளுடன் அவர் ஊர்வலமாக வந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டபோது, சிலர் கல்வீசி தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, கல்வீச்சில் ஈடுபட்டவர்கள் மீது நாம் தமிழர் கட்சித் தொண்டர்கள் தாக்குதல் நடத்தினர். இதுகுறித்து சீமான் கூறும் போது, ‘அமைதியாக தேர்தல் பிரச்சாரம் செய்து வந்தபோது, திமுகவினர் மாடியில் இருந்து கல் எறிந்தனர். இதில் எங்கள் கட்சித் தொண்டர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது’ என்றார். இந்த மோதலில் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 6 பேர், திமுகவைச் சேர்ந்த 5 பேர் மற்றும் காவல்துறையினர் சிலரும் காயமடைந்து ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

24 மணி நேரத்தில் பதில்: தேர்தல் பிரச்சாரத்தின்போது, சாதி, மத உணர்வுகளைத் தூண்டும் வகையில் சீமான் பேசியது தொடர்பாக விளக்கமளிக்க வேண்டும் என அக்கட்சியின் வேட்பாளருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதுகுறித்து தேர்தல் நடத்தும் அலுவலர் சிவகுமார் கூறும்போது, “தேர்தல் பிரச்சாரத்தின்போது, சாதி, மத உணர்வுகளைத் தூண்டும் வகையில் பேசக்கூடாது என்ற தேர்தல் விதி உள்ளது.

இந்த விதியை மீறி சீமான் பேசியது தொடர்பாக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதனுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு 24 மணி நேரத்தில் அவர் பதில் அளிக்க வேண்டும். அவர் அளிக்கும் பதிலின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.