உளவள ஆலோசனைகளை வழங்குவதற்கு பிரான்ஸ் முன்வர வேண்டும்

315 0

கிழக்கிலும் வடக்கிலும்  யுத்த காலப்பகுதியில் ஏராளமான மக்கள் தமது உறவுகளை தொலைத்து உளரீதியாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கான உளவள ஆலோசனைகளை வழங்குவதற்கு பிரான்ஸ் அரசாங்கம் முன்வர  வேண்டும் என கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் வேண்டுகோள் விடுத்தார்,

பிரான்ஸின் செனட்டரான மேரி ப்லண்டின் (marie blandin) தலைமையிலான தூதுக்குழுவுக்கும் கிழக்கு மாகாண முதலமைச்சருக்கிடையிலான சந்திப்பு கொழும்பிலுள்ள அவரது அலுவலகத்தில் இடம்பெற்றது,   இதன் போது  கிழக்கில் யுத்தம் மற்றும் சுனாமியால் பாதிக்கப்பட்டு இதுவரை பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் வாழ்ந்து வரும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கான திட்டங்கள் தொடர்பில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் பிரான்ஸ் தூதுக்குழுவுடன் கலந்துரையாடினார்.

 

அது மாத்திரமன்றி  பிரான்ஸ் அரசாங்கத்தின் நிதியுதவியுடன் முன்னெடுக்கப்படும் உறுகாமம் கித்துள் ஆகிய குளங்களை  நதியுடன் இணைக்கும் நதிநீர் இணைப்புத்திட்டத்திற்கான நிதியினை விரைவில் பிரான்ஸ் அபிவிருத்தி முகவர் நிலையம் வழங்கவுள்ளதுடன் இந்த திட்டம் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளது.  இந்தத் திட்டத்தினூடாக சுனாமியால் பாதிக்கப்பட்ட பல பகுதிகளுக்கு பல நன்மைகள் கிட்டவுள்ளதுடன் இரு போகங்கள் பயிர் செய்யக்கூடிய வாய்ப்பு மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகளுக்கு கிட்டவுள்ளது.

மேலும் கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை ,மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களை மையப்படுத்தி  தொழிற்சாலைகளை அமைப்பது தொடர்பிலும் இதன்  போது கவனம் செலுத்தப்பட்டது.

இதனூடாக வேலையில்லாப் பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பில்  அரச துறையில் மட்டுமன்றி பட்டதாரிகளுக்கு சிறந்த எதிர்காலத்தை வழங்கக் கூடிய பிரான்ஸ் தொழில்நுட்ப நிறுவனங்களை உருவாக்கி அதில் பட்டதாரிகளுக்கு  ஆங்கில மொழி மற்றும் தொழில்நுட்ப பயிற்சிகளை வழங்கி அவர்களை இணைத்துக் கொள்வது தொடர்பிலும் இதன் போது ஆராயப்பட்டன.

கிழக்கில் பல காணிகள் இதுவரை விடுவிக்கப்படாமல் இருப்பது அவை தொடர்பான நகர்வுகள் மந்த கதியில் இடம்பெறுகின்றமை தொடர்பிலும் இதன் போது  கிழக்கு முதலமைச்சர் பிரான்ஸ் தூதுக்குழுவிடம் சுட்டிக்காட்டினார்,

அத்துடன் சிறுபான்மையினரான முஸ்லிங்களின் பள்ளிவாசல்களும் முஸ்லிங்களும் இதுவரை பல்வேறு அச்சுறுத்தல்களை எதிர்நோக்கி வருவதாகவும்  இந்த நாட்டில் வாழும் முஸ்லிங்களின் வர்த்தகங்களின் பாதுகாப்பு,மற்றும் அவர்கள் வாழ்வதற்கு ஏற்ற நிம்மதியான சூழலை உருவாக்குவது தொடர்பிலும் அரசாங்கத்துக்கு அழுத்தங்களை கொடுக்க வேண்டும் என கிழக்கு முதலமைச்சர் கேட்டுக் கொண்டார்.

மாகாணங்களுக்கு 13 ஆவது திருத்தத்தின் ஊடாக  வழங்கப்பட்டுள்ள அதிகாரப் பகிர்வை  அமுல்ப்படுத்துவதன் ஊடாக இவ்வாறான சிறந்த ஆட்சி முறைமைகளின் உச்ச கட்ட பலனை பெற்றுக் கொள்ள முடியும் என பிரான்ஸ் தூதுக்குழுவினர் சுட்டிக்காட்டினர்.

அது மாத்திரமன்றி கிழக்கில்  தற்போது  முதலீட்டாளர்களுக்கு ஏற்றதொரு சூழ்நிலை உருவாகியுள்ளதாகவும் இதனூடாக கிழக்கில் மேலும் பல முதலீடுகளை முன்னெடுப்பது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளதாகவும் அவர்கள் கூறினர்,