ஆப்கானிஸ்தானில் ஆளில்லா விமான தாக்குதலில் தலீபான் தளபதி மரணம்

243 0

ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் ஆளில்லா விமானம் குண்டுமழை பொழிந்தது. இதில் அப்துல் சலாம் அகுந்த் உள்பட 8 பேர் கொல்லப்பட்டனர்.

ஆப்கானிஸ்தானின் குண்டூஸ் நகரை கடந்த 2015-ம் ஆண்டு தலீபான் தீவிரவாதிகள் பிடித்தனர். இந்த நகரில் தலீபான் இயக்கத்தின் மூத்த தளபதியாக செயல்பட்டு வந்தவர் முல்லா அப்துல் சலாம் அகுந்த். இவரது மேற்பார்வையில்தான் பயங்கரவாத தாக்குதல்கள் அங்கு அரங்கேற்றப்பட்டு வந்தன.

தலீபான்களுக்கு எதிராக அந்த நாட்டு ராணுவம் மற்றும் அமெரிக்க பாதுகாப்பு படையினர் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இவ்வாறு வடக்கு ஆப்கானிஸ்தானில் சமீபத்தில் அமெரிக்காவின் ஆளில்லா விமானம் குண்டுமழை பொழிந்தது. இதில் அப்துல் சலாம் அகுந்த் உள்பட 8 பேர் கொல்லப்பட்டனர்.

அகுந்தின் மரணத்தை உறுதி செய்த தலீபான் அமைப்பினர், அவருடன் மேலும் 2 பேர் கொல்லப்பட்டதாக தெரிவித்து உள்ளனர். அகுந்த் கொல்லப்பட்டதை தலீபான் செய்தி தொடர்பாளரான சபியுல்லா முஜாகித்தும் உறுதிப்படுத்தினார். இது எங்கள் வாழ்வின் ஒரு அங்கம் என்று கூறிய கோஸ்ட் மாகாண தலீபான் படையினர், அவரது வீரமரணத்தை உறுதிப்படுத்துவதில் மகிழ்வதாகவும் கூறியுள்ளனர்.

ஆளில்லா விமான தாக்குதலில் கொல்லப்பட்ட அப்துல் சலாம் அகுந்த், ராணுவம் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டதாக ஏற்கனவே அதிகாரிகள் பலமுறை கூறியிருந்தனர். அதை தலீபான் அமைப்பு உறுதி செய்யவில்லை. ஆனால் இந்தமுறை அவரது மரணத்தை தலீபான்கள் உறுதி செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.