அரசாங்கத்தின் கொள்கை பிரகடன உரை!

67 0

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது அமர்வு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

புதிய அமர்வின் ஆரம்ப நிகழ்வு தொடர்பான நடவடிக்கைகள் இன்று (08) காலை 9.30 மணியளவில் ஆரம்பமானதுடன் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தகன மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோரின் வருகையே முதலில் இடம்பெற்றது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வருகை காலை 9.40 மணியளவில் இடம்பெற்றதாக  செய்தியாளர் தெரிவித்தார்.

சபாநாயகர் ஜனாதிபதியை வரவேற்றார்.

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடரை ஆரம்பித்து வைத்து ஜனாதிபதி அரசாங்கத்தின் கொள்கை பிரகடன உரையை ஆற்றிவருகிறார்.

ஜனாதிபதியின் உரையின் பின்னர் பாராளுமன்றம் ஒத்திவைக்கப்படும் என பாராளுமன்ற படைக்கள சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

வரிவிதிப்புக்காக புதிய கொள்கைகளை அறிமுகப்படுத்துவது அரசியல் ரீதியாக விரும்பத்தகாத தீர்மானம் என்று ஜனாதிபதி இதன்போது தெரிவித்துள்ளார்.

“கடந்த காலத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் காரணமாக இந்த அழுத்தத்தை கொஞ்சம் கொஞ்சமாக குறைக்க முடிந்தது. இப்போது பொருளாதாரம் சற்று ஸ்திரமாகிவிட்டது. மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். இது எளிதான பயணம் அல்ல. ஆனால் பயணம் இன்னும் முடியவில்லை. வீழ்ச்சியடையவிருந்த அரசாங்கம், நிதியமைப்பைப் பாதுகாக்க நடவடிக்கை எடுத்தது. “நினைவில் கொள்ளுங்கள், எனக்கு பிரபலமாக தேவையில்லை. நெருக்கடியில் இருந்து இந்த நாட்டை மீட்பதே எனது தேவையாகும். ஆம், நாட்டு நலனுக்காக மக்கள் விரும்பாத முடிவுகள் எடுக்கப்படுகின்றன. இன்னும் இரண்டு அல்லது மூன்று வருடங்களில் அந்த முடிவுகளின் முக்கியத்துவம் பலருக்கும் புரியும். வரி விதிக்கக்கூடிய வருமான வரம்பை ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சமாக உயர்த்த வேண்டும் என்று சிலர் கூறுகின்றனர். பணம் செலுத்தும் வரி முறை ஒழிக்கப்பட வேண்டும் என்று சிலர் கூறுகின்றனர். இந்த வரிகள் தானாக முன்வந்து விதிக்கப்படவில்லை. ஆனால் நாம் விரும்பியதைச் செய்வதன் மூலம் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது. நீங்கள் விரும்பாவிட்டாலும், சரியானதைச் செய்யுங்கள். வருமான வரி ரத்து செய்யப்பட்டால் நாட்டுக்கு 100 பில்லியன் ரூபாய் இழப்பு ஏற்படும். வரி வரம்பை இரண்டு இலட்சமாக உயர்த்தினால், நாட்டுக்கு 63 பில்லியன் இழப்பு ஏற்படும். இழக்கப்படும் மொத்தத் தொகை ரூ.163 பில்லியன்களாகும். இன்று இந்தத் தொகையை இழக்கும் நிலையில் நாங்கள் இல்லை… இன்று வாழ்வது கடினமாக உள்ளது. ஆனால் இந்த கஷ்டத்தை இன்னும் 5 முதல் 6 மாதங்கள் பொறுத்துக்கொண்டால் ஒரு தீர்வை எட்டலாம். இப்படியே தொடர்ந்தால், 3, 4ம் காலாண்டில் அரசு ஊழியர்களுக்கு மேலதிக கொடுப்பனவை வழங்க முடியும். தனியாருக்குச் சலுகை அளிக்க முடியும். முழு நாட்டு மக்களின் கைகளையும் இன்றை விட வளப்படுத்த முடியும். வேலைவாய்ப்பு, வருமானத்தை அதிகரிக்க முடியும். வங்கி வட்டியை குறைக்க முடியும். மூன்றாண்டுகளில், இன்றைய வருமானத்தை விட 75% மேலதிக வருமானத்தை நாட்டு மக்கள் பெற முடியும்…’’ என்றார்.