துருக்கி, சிரியாவில் உயிரிழப்பு 7,900 ஆக அதிகரிப்பு

89 0

துருக்கியில் நிகழ்ந்த பூகம்பத்தால் அந்நாட்டிலும், அதன் அண்டை நாடான சிரியாவிலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7,900-ஐ கடந்துள்ளது.

துருக்கியின் காஜியன்டப் நகரை மையமாக கொண்டு நேற்று முன்தினம்(திங்கள்கிழமை) பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. இது ரிக்டர் அலகில் 7.8 ஆக பதிவானது. இந்த பூகம்பத்தால் துருக்கியின் 10 மாகாணங்கள் மற்றும் அண்டை நாடான சிரியாவின் வடக்கு பகுதியில் பேரழிவு ஏற்பட்டுள்ளது. பெரிய பூகம்பத்தை தொடர்ந்து துருக்கி, சிரியாவில் அடுத்தடுத்து 312 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அலகில் 4 முதல் 7.5 வரை பதிவாகியுள்ளது.

அதிகரிக்கும் உயிரிழப்புகள்: துருக்கியில் இதுவரை 5,894 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 34,800-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். துருக்கி ராணுவம், போலீஸ்,தீயணைப்பு படை என 26,000-க்கும் மேற்பட்ட வீரர்கள் இரவு, பகலாக மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வெளிநாடுகளை சேர்ந்த 4,000 பேரும் மீட்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

சிரியாவின் வடக்கு, கிழக்கு பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. சிரியா அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் ஓரளவுக்கு மீட்பு பணிகள் நடைபெறுகின்றன. ஆனால் கிளர்ச்சிப் படைகள் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகள் பேரழிவில் இருந்து மீள முடியாமல் தவித்து வருகின்றன. சிரியாவில் இதுவரை 2,032 பேர் உயிரிழந்துள்ளனர்.