மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் சத்தியாக்கிரக போராட்டம் ஏழாவது நாளாக(காணொளி)

267 0

 

மட்டக்களப்பு மாவட்டத்தில் வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினைக்கு தீர்வுகாணும் வகையிலான நடவடிக்கைகளை, நல்லாட்சி அரசாங்கம் மேற்கொள்ளும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினர் மட்டக்களப்பு காந்திபூங்கா முன்பாக மேற்கொண்டுவரும் சத்தியாக்கிரக போராட்டம் ஏழாவது நாளாக இன்றும் தொடர்கிறது.

இன்று காலை சத்தியாக்கிரக போராட்டம் நடைபெறும் இடத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்களும் மாகாணசபை உறுப்பினர்களும் வருகைதந்து மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவினை தெரிவித்தனர்.

இதன்போது கறுப்புப்பட்டியணிந்து, பாராளுமன்ற உறுப்பினர்களும், மாகாணசபை உறுப்பினர்களும் வேலையற்ற பட்டதாரிகளுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இப்போராட்டத்தில், தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.வியாழேந்திரன், ஞா.சிறிநேசன், கிழக்கு மாகாணசபையின் பிரதித் தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார், மாகாணசபை உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரம், மா.நடராஜா, இரா.துரைரெட்ணம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா, பா.அரியநேத்திரன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினர் அலிஸாகிர் மௌலானா, மாகாணசபை உறுப்பினர் சிப்லி பாருக் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது கருத்து தெரிவித்த தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் பட்டதாரிகளின் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், விரைவில் நடவடிக்கையெடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

இதேவேளை மாணவர்களின் போராட்டத்தின் கிழக்கு மாகாணத்திற்கு வெளியே கடமையாற்றும் ஆசிரியர்கள் ஒன்றியம், மட்டக்களப்பு மாவட்ட சென்ஜோன் அம்பியுலன்ஸ் ஆகிய அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.