காணாமற் ஆக்கப்பட்டவர்களின் குரல் அமைப்பான வீ நீட் அமைப்பினரால் இன்று கொழும்பில் கவனயீர்ப்புப் போராட்டம்(காணொளி)

395 0

வடக்கு கிழக்கில் வலிந்து காணாமற் ஆக்கப்பட்டவர்களின் குரல் அமைப்பான வீ நீட் அமைப்பினரால் இன்று கொழும்பில் கவனயீர்ப்புப் போராட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது.

8 மாவட்டங்களிலுள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் உருவாக்கப்பட்டுள்ள வீ நீட் அமைப்பினரால் இன்று அமைதியான முறையில் கொழும்பில் கவனயீர்ப்புப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.

வடக்கு கிழக்கில் யுத்தத்தின் போதும், அதன் பின்னரும் காணாமற்போனவர்களின் உறவினர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

கொழும்பிலுள்ள அமெரிக்கத்; தூதரகம் முன்னிலையில் இன்று காலை மேற்கொள்ளப்பட்ட இக்கவனயீர்ப்புப் போராட்டத்தின்போது, அமெரிக்கத் தூதரக அதிகாரிகளிடம் மகஜர் கையளிக்கப்பட்டதையடுத்து, தொடர்ந்து இந்தியத் தூதரகத்தின் முன்னால் கவனயீர்ப்புப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.

தொடர்ந்து இந்தியத் தூதரக அதிகாரிகளிடம் வீ நீட் அமைப்பினரால் மகஜரொன்று கையளிக்கப்பட்டதையடுத்து, பிரித்தானிய தூதுவராலயத்திற்கு முன்னாலும் கவனயீர்ப்புப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டு, பிரித்தானிய தூதரக அதிகாரிகளிடமும் மகஜர் கையளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கொழும்பிலுள்ள ஐ.நா அலுவலக அதிகாரிகளிடமும் மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன்,

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை, இலங்கைக்கு மேலும் காலஅவகாசம் வழங்கக்கூடாது எனவும், காலஅவகாசம் வழங்குவதானது காணாமற்போனவர்களின் உறவினர்களுக்கு இழைக்கப்படும் அநீதியாக அமையுமெனவும் தெரிவித்துள்ளார்.