கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சுரேஸ் பிரேமச்சந்திரன் போன்ற தலைவர்கள் நாடாளுமன்றில் இன்று இல்லாதது மிகப் பெரிய வெற்றிடங்கள் என்பதை மறுக்க முடியாது!

281 0

தமிழ் மக்களின் பலத்தை உடைத்து நொருக்க யாருக்கும் அனுமதி வழங்கக்கூடாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் தெரிவித்துள்ளார்.

அண்மைக் காலமாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகள், மற்றும் ஏனைய தமிழ் கட்சிகள் சில ஏட்டிக்கு போட்டியான அறிக்கைகளையும் விமர்சனங்களையும் முன்வைத்து வருகின்றன. இந்நிலையில்,  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவித்த அவர், ”காணி அபகரிப்பு, கைதிகளின் விடுதலை, காணாமல் போனோரின் பிரச்சினை என பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி எம்மக்கள் வீதியில் இறங்கியுள்ள இந்த சந்தர்ப்பத்தில் நாம் புதிய தலைமையைப் பற்றி பேசுகின்றோம்.

கூட்டமைப்பிலிருந்து வெளியேறுவது குறித்தும் சிலர் வெளியேற்றப்பட வேண்டும் எனவும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

தமிழ் மக்களின் அரசியல் விடுதலைக்காக, தமிழ் மக்களால் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அமைப்பிலிருந்து யாரும் யாரையும் வெளியேற்றவும் முடியாது, வெளியேறவும் முடியாது.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கூட்டமைப்பில் இல்லாமல் சென்றமையானது துரதிஷ்டமே. கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சுரேஸ் பிரேமச்சந்திரன் போன்ற தலைவர்கள் நாடாளுமன்றில் இன்று இல்லாதது மிகப் பெரிய வெற்றிடங்கள் என்பதை மறுக்க முடியாது. அவர்கள் இருந்திருப்பின் கூட்டமைப்பினதும், தமிழ் மக்களினதும் பலம் கண்டு உலகம் வியந்திருக்கும்.

எனவே, தமிழ் தேசிய கூட்டமைப்பை பலப்படுத்த அனைவரும் முரண்பாடுகளையும், பகைமைகளையும் மறந்து ஒன்றுபட வேண்டும்” என்றும் குறிப்பிட்டார்.