முல்லைத்தீவு கடலில் இந்திய றோலர்களின் வருகை அதிகரிப்பு

238 0

முல்லைத்தீவு கடலில் இந்திய றோலர்களின் வருகை, கடந்த இரு நாட்களாக அதிகரித்துள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் சமாசத் தலைவர் அந்தோனிப்பிள்ளை மரியராசா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தெரிவிக்கையில், 80க்கு மேற்பட்ட றோலர்கள் வந்ததுடன், கடந்த 19 ஆம் திகதி இரவு, முல்லைத்தீவு கடற்றொழிலாளர்கள் இருவரது வலைகளை இந்திய றோலர்கள் அறுத்து எடுத்துச் சென்றுள்ளனர்.

இது தொடர்பாக முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத் திணைக்கள உதவிப் பணிப்பாளரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

கேப்பாப்புலவிலும் புதுக்குடியிருப்பிலும் தமது காணிகளை விடுவிக்குமாறு எமது மக்கள் போராட்டம் நடாத்திக் கொண்டிருக்கும் சூழ்நிலையில், முல்லைத்தீவின் உயிர்நாடித் தொழிலான கடற்றொழிலை இல்லாதொழிக்கும் வகையில், இந்திய றோலர்களின் வருகை அதிகரித்துள்ளது.

இதனைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என சமாசத் தலைவர் மேலும் தெரிவித்தார்.