339 உள்ளூராட்சி மன்றங்களுக்காக 80,720 வேட்பாளர்கள் போட்டி

105 0

மார்ச் மாதம் 09 ஆம் திகதி இடம்பெறவுள்ள உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் பதிவு செய்யப்பட்ட 58 அரசியல் கட்சிகள் மற்றும் 329 சுயேட்சை குழுக்கள் ஊடாக நாடளாவிய ரீதியில் 80,720 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளனர்.

உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதிக்கு பின்னர் இரு தினங்களில் நடத்த தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு உத்தேசித்துள்ளது.

காலி மாவட்டம் எல்பிடிய உள்ளூர் அதிகார சபையை தவிர்த்து நாடளாவிய ரீதியில் உள்ள 339 உள்ளூர் அதிகார சபைகளுக்குமான உள்ளூராட்சிமன்றத் தேர்தலை எதிர்வரும் மார்ச் மாதம் 09ஆம் திகதி நடத்த தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு கடந்த 21 ஆம் திகதி தீர்மானித்தது.

தேர்தலில் போட்டியிடும் அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள்,சுயாதீன குழுக்கள்,ஏற்றுக்கொள்ளப்பட்ட மற்றும் நிராகரிக்கப்பட்ட வேட்பு மனுக்கல் தொடர்பான ஆவணங்களை சகல மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர்கள் நேற்று திங்கட்கிழமை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கையளித்ததை தொடர்ந்து. தேர்தல் திகதி மற்றும் தேர்தல் தொடர்பான ஏனைய விடயங்களை உள்ளடக்கிய வகையில் வர்த்தமானி அறிவித்தலை அச்சுடும் பணிகளை அரசாங்க அச்சகத் திணைக்களம் இன்று  செவ்வாய்க்கிழமை ஆரம்பித்தது.

திட்டமிட்ட வகையில் எதிர்வரும் மார்ச் மாதம் 09 ஆம் திகதி தேர்தலை நடத்த தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளது.தேர்தல் நடவடிக்கைகளுக்கு நிதி ஒதுக்குவது தொடர்பில் திறைச்சேரி சாதகமான நிலைப்பாட்டில் உள்ளது என தேர்தல்கள் ஆணையாளர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.