ஜனாதிபதியின் ஏமாற்று செயற்பாடுகளில் பங்காளியாக முடியாது

177 0

நாட்டில் புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக குறிப்பிட்டுக்கொண்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமிழ் சமூகத்தையும் சர்வதேசத்தையும் ஏமாற்றுகிறார்.

இவரது ஏமாற்றுச் செயற்பாடுகளில் பங்காளியாக முடியாது என்பதால் இன்று இடம்பெறும் சர்வகட்சி தலைவர் கூட்டத்தில் கலந்துகொள்ளப் போவதில்லை.

அதிகாரத்தை பகிர்வதாக குறிப்பிட்டுக்கொண்டு நாட்டில் தேவையில்லாத பிரச்சினைகளை தோற்றுவிப்பதை ஜனாதிபதி தவிர்த்துக்கொள்ள வேண்டும் என லங்கா சமசமாஜ கட்சியின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.

சர்வகட்சி தலைவர் கூட்டம் தொடர்பில் வினவியபோது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

75ஆவது சுதந்திர தினத்துக்கு முன்னர் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டதை ஏற்றுக்கொண்டோம்.

நாட்டில் புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டிய கட்டாயம் காணப்படுகிறது. ஜனாதிபதி தலைமையில் கடந்த மாதம் 13ஆம் திகதி இடம்பெற்ற சர்வகட்சி தலைவர் கூட்டத்தில் உண்மை நோக்கத்துடன் கலந்துகொண்டேன்.

தமிழ் மக்கள் மத்தியில் சமஷ்டி பற்றி கருத்துரைக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற கட்சித் தலைவர் கூட்டத்தில் சமஷ்டி தொடர்பில் கருத்துரைக்கவில்லை. அதிகாரப் பகிர்வு விவகாரம் தேர்தல் கால பிரசாரமாகவே காணப்படுகிறது.

இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக குறிப்பிட்டுக்கொண்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமிழ் மக்களையும், சர்வதேசத்தையும் ஏமாற்றுகிறார்.

உண்மை நோக்கத்துடன் தீர்வு காணும் பேச்சுவார்த்தைகள் இடம்பெறவில்லை. ஜனாதிபதியின் ஏமாற்று செயற்பாடுகளில் பங்காளியாகக்கூடாது என்பதால் ஜனாதிபதி தலைமையில் இன்று இடம்பெறும் சர்வகட்சி தலைவர் கூட்டத்தில் கலந்துகொள்ளப் போவதில்லை.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது அரசியல் வெற்றிக்காக இனப்பிரச்சினை விவகாரத்தை பயன்படுத்திக்கொள்கிறார். இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் தான் மாகாண சபை முறைமை உருவாக்கப்பட்டது. நல்லாட்சி அரசாங்கம் மாகாண சபை தேர்தலை நடத்த முடியாத அளவுக்கு சட்ட சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

மாகாண சபைத் தேர்தல் காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளமைக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பொறுப்புக்கூற வேண்டும். அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்துக்கு அமைய வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை வழங்குவதாக ஜனாதிபதி குறிப்பிடுகிறார்.

நாடு மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதன் பின்னணியில் இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை தோற்றுவிக்கும் வகையில் ஜனாதிபதி செயற்படக்கூடாது.

மாகாண சபைத் தேர்தலை நடத்தினால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்கள் தமக்கான பிரதிநிதிகளை தெரிவுசெய்துகொள்வார்கள். மாகாண சபை தேர்தலை நடத்த முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம்.

நாட்டு மக்கள் பொருளாதார ரீதியில் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தேசிய நல்லிணக்கத்துக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் ஜனாதிபதி செயல்படக்கூடாது என்றார்.