மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு விரைவில் அனுமதி வழங்குவதற்கும், கடந்த காலத்துக்கும் ஏற்புடைய வகையில் மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு அனுமதி வழங்குவதற்கும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு அதிகாரம் உள்ளதா என்பது குறித்து சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெறுவதற்கு ஆணைக்குழு ஏகமனதாகத் தீர்மானம் எடுத்திருப்பதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் தேசிய பேரவையில் தெரிவித்தனர்.
இதற்கான ஆவணங்கள் இன்றையதினம் (25) அனுப்பி வைக்கப்படும் என உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர்.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில், பிரதமர் தினேஷ் குணவர்த்தன அவர்களின் பங்கேற்புடன் நேற்றையதினம் (24) பாராளுமன்றத்தில் நடைபெற்ற தேசிய பேரவைக் கூட்டத்திலேயே மின்சாரக் கட்டணத்தை உயர்த்தும் யோசனை குறித்துக் கலந்துரையாடப்பட்டது.
2014ஆம் ஆண்டும் இதேபோன்று மின்சாரக் கட்டண அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இங்கு கருத்துத் தெரிவித்தார்.
தேவைப்பட்டால் இது தொடர்பான ஆவணங்களை ஆணைக்குழுவுக்கு வழங்க முடியும் என்றும் குறிப்பிட்டார்.
அத்துடன், இவ்விடயம் தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையை விரைவில் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுத்தார்.
இலங்கை மின்சாரசபையின் செயற்பாட்டுச் செலவுகளை தாங்கிக்கொள்ள முடியாத நிலையில் இருப்பதாக மின்சார சபையின் அதிகாரிகள் இங்கு சுட்டிக்காட்டினர்.

