மாற்றுத்திறனாளிகள், நீண்டகாலம் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ள குறைந்த வருமானமுடைய குடும்பங்களுக்கு, ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான நான்கு மாத காலத்துக்கு விசேட கொடுப்பனவுகள் வழங்கப்பட உள்ளதாக, அம்பாறை மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் எம்.எஸ்.எம் சப்றாஸ் நேற்று (23) தெரிவித்தார்.
மாற்றுத்திறனாளி, சிறு நீரக நோயாளி கொண்ட குடும்பத்துக்கு மாதாந்தம் வழங்கப்படும் ஐயாயிரம் ரூபாய்க்கு மேலதிகமாக 2,500ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.
மாற்றுத்திறனாளி, சிறுநீரக நோயாளர் உள்ள காத்திருப்புப் பட்டியல் குடும்பத்துக்கு ஐயாயிரம் ரூபாய் விசேட உதவித் தொகை வழங்கப்படும். காத்திருப்போர் பட்டியல் குடும்பங்களின் எண்ணிக்கை டிசெம்பர், 2022 இன் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் இருக்க வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இயலாமையின் காரணமாக வங்கியில் வந்து பணத்தைப் பெற முடியாத பயனாளிகளுக்கு, சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஊடாக பயனாளிகளின் வீடுகளுக்கு கொண்டு சென்று வழங்குவதற்கு நடவடிக்ககை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

