மீண்டும் அமைச்சரவை அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க ….

170 0

அமைச்சரவை அமைச்சுக்களின் எண்ணிக்கையை விரிவுப்படுத்த அரசாங்கம் உத்தேசித்துள்ளது.

இதற்கமைய ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்களான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, எஸ்.பி.திஸாநாயக்க, ரோஹித அபேகுணவர்தன ஆகியோருக்கு அமைச்சு பதவிகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமைச்சர்களான ரமேஷ் பதிரான, பந்துல குணவர்தன ஆகியோர் வசமுள்ள அமைச்சு பதவிகளில் வேறுப்படுத்த அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தின் ஊடாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த ஆண்டு ஜூலை மாதம் தெரிவு செய்யப்பட்டதை தொடர்ந்து 20 அமைச்சுக்களை உள்ளடக்கிய வகையில் தற்காலிக அமைச்சரவை ஸ்தாபிக்கப்பட்டது.

பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் ஜீவன் தொண்டமான், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் பவித்ரா வன்னியராச்சி ஆகியோருக்கு கடந்த வியாழக்கிழமை அமைச்சவை அமைச்சுக்கள் வழங்கப்பட்டன.

அமைச்சர் மஹிந்த அமரவீரவிடமிருந்த வனஜீவராசிகள் மற்றும் வனவளங்கள் பாதுகாப்பு அமைச்சு பவித்ரா பன்னியராச்சிக்கு வழங்கப்பட்டது.

போக்குவரத்து,ஊடகத்துறை மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன, பெருந்தோட்டத்துறை அபிவிருத்தி மற்றும் கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பதிரன ஆகியோரின் அமைச்சுக்களை வேறுபடுத்த அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.

முன்னாள் நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கு நெடுஞ்சாலைகள் அமைச்சு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நிதி நெருக்கடிக்கு மத்தியில் அமைச்சரவை அமைச்சுக்களை விரிவுபடுத்துவது தொடர்பில் அரசாங்கத்தில் உயர்மட்ட பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது.

முக்கிய அமைச்சுக்கள் ஒரு அமைச்சரின் கீழ் காணப்படுவது துறைசார் மட்டத்தில் நெருக்கடியை தோற்றுவித்துள்ளதாக அமைச்சர்கள் சுட்டிக்காட்டியதை தொடர்ந்து அமைச்சரவையை விரிவுபடுத்த அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.