அரசாங்கத்தினால் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தனிப்பட்ட தேவைகளுக்காக 19 வாகனங்களும் , 950 000 ரூபா பணமும் வழங்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பிரத்தியேக செயலாளர் சுகீஷ்வர பண்டார அறிக்கையொன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ளார்.
அவரால் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது :
‘முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தனிப்பட்ட தேவைகளுக்காக 19 வாகனங்களும் , அவரது உணவு உள்ளிட்டவற்றுக்காக 950 000 ரூபா பணமும் அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள செய்திகள் வெளியாகியுள்ளமை கவலைக்குரியதாகும்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவியிலிருந்த காலப்பகுதியில் கூட எந்தவொரு வாகனத்தையும் அநாவசிய தேவைகளுக்காகப் பயன்படுத்தவில்லை.
தேசிய உற்சவங்களைத் தவிர வேறு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அவர் உத்தியோகபூர்வ வாகனங்களைப் பயன்படுத்தவில்லை என்பதை மக்கள் நன்கு அறிவார்கள்.
இவ்வாறான நிலையில் அவரது தனிப்பட்ட தேவைகளுக்காக 19 வாகனங்கள் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுவது மக்களை ஏமாற்றும் செயற்பாடாகும்.
முன்னாள் ஜனாதிபதிகள் அனைவருக்கும் பாதுகாப்பிற்கான ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன் அடிப்படையிலேயே முன்னாள் ஜனாதிபதி என்ற அடிப்படையில் கோட்டாபய ராஜபக்ஷவின் பாதுகாப்பிற்கு தேவையான வாகனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
அவற்றை அவரது தனிப்பட்ட தேவைகளுக்காக ஒதுக்கப்பட்டவை என்று செய்திகளை வெளியிடுகின்றமையானது மக்களை தவறான பாதையில் திசை திருப்பும் செயற்பாடாகும்.
இவ்வாறு ஒதுக்கப்பட்டுள்ள வாகனங்கள் அவரது பாதுகாப்பிற்காக மாத்திரம் பயன்படுத்தப்படுகின்றனவே தவிர அவரது தனிப்பட்ட தேவைகளுக்காக அல்ல.
அவர் தற்போதும் தனது சொந்த காரொன்றையே பயன்படுத்திக் கொண்டிருக்கின்றார். 1986 – 4 ஆம் இலக்க ஜனாதிபதியின் உரிமைகள் சட்டத்தின் மூலம் ஜனாதிபதியொருவர் ஓய்வு பெற்றதன் பின்னர் வழங்கப்பட வேண்டிய கொடுப்பனவு, நிதி மற்றும் ஏனைய சலுகைகள் தொடர்பில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதிகள் அனைவருக்கும் ஒதுக்கப்பட்டுள்ள நிதி ஒதுக்கீடுகளுக்கு மேலதிகமாக எந்தவொரு விசேட சலுகையும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு வழங்கப்படவில்லை. என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

