13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்தும் பின்னணியில் பசிலின் சூழ்ச்சி

157 0

நாட்டு மக்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நாட்டுக்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுத்து நாட்டை பிளவுபடுத்தும் செயல்பாட்டையே ஜனாதிபதி முன்னெடுத்துள்ளார்.

எனினும் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டமூலத்தை நடைமுறைப்படுத்த ஜனாதிபதிக்கு எந்தவொரு அதிகாரமும் கிடையாது.

மேலும் 13 ஐ  நிறைவேற்றுவதற்கு மொட்டுக்கட்சியின் முழுமையான ஆதரவு வேண்டும் என்றும் இந்த திட்டத்தை அமுல்படுத்தும் பின்னணியில் பசில் ராஜபக்ஷவே செயற்படுவதாகவும் தேசபிமான தேசிய இயக்கத்தின் செயலாளர் வசந்த பண்டார தெரிவித்துள்ளார்.

புதன்கிழமை (18) பொரளை என்.எம்.பெரேரா நிலையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

13 ஆவது  திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தினால் குறுகிய காலப்பகுதிக்குள் நாடு பிளவுபடும். இதன்மூலம்   பிரிவினைவாத கொள்ளைகளுடைய தலைவர்கள் மற்றும் பல்வேறு புலம்பெயர் அமைப்புகளின் நோக்கங்கள் மாத்திரமே நிறைவேறும்.மேலும் உண்மையான பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்க போவதில்லை.

மேலும் கோட்டாபய ராஜபக்ஷ மன்னிக்க முடியாத 3 குற்றங்கங்களை செய்துள்ளார். அதில் முதலாவது ரணிலை பிரதமராக நியமித்து இந்த நாட்டை மேலும் நெருக்கடிக்கு தள்ளியமை.

இரண்டாவது தேசிய பட்டியலின் மூலம் அலி சப்ரியை நியமித்து அரசியல் சூழ்ச்சிக்குள் உள்வாங்கி ரணில் மற்றும் அலி சப்ரி அரசியல் நாடகத்தை தோற்றுவித்தமை. இறுதியாக மிலிந்த மொரகொடவை இந்திய உயர்ஸ்தானிகராக நியமித்ததன் மூலம் இந்திய மற்றும் அமெரிக்க உடன்படிக்கைகளை நடைமுறைப்படுத்த தலைமைத்துவம் வகிக்க சந்தர்ப்பம் உருவாக்கி கொடுத்தமையாகும்.

இந்நிலையில் ரணிலை கொண்டு 13 ஐ நடைமுறைப்படுத்தும் வேலைத்திட்டமே தற்போது நடைபெறுகிறது. இதன் பின்னணியில் பெசில் ராஜபக்ஷவே இருக்கிறார்.

தன்னுடைய கட்சியின் ஆதரவு மற்றும் பாராளுமன்றத்தின் பெரும்பான்மை பலத்தை வைத்து கொண்டு இதனை நடைமுறைப்படுத்துவதற்கு முயற்சிறார். ரணிலும் பசிலும் கூட்டு சேர்ந்து அரசியல் நாடகத்தை நடத்துகின்றனர்.

ஜனாதிபதி உண்மையில் நாட்டு மக்களுடைய பிரச்சனைகளை கண்டறிந்து தீர்வினை பெற்றுகொடுக்க விரும்பினால் ஆணைக்குழுவை நியமிக்க வேண்டும்.

அதன் மூலம் இலகுவாக தீர்வு காணலாம். அதனை அதை விடுத்து வடக்கில் தமிழ் மக்களுடைய பிரச்சினைகளையும், முஸ்லிம் மக்களுடைய பிரச்சினைகளையும் மற்றும் பெருந்தோட்ட மக்கள் என்று தனித்தனியாக பாகுபடுத்தி பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுத் தருவதாக கூறுவது  என்பது அரசியல் நாடகமாகும். நாட்டு மக்களை ஏமாற்றும் வேலையாகும். எனவே மக்கள் ஏமாறாமல் சிந்தித்து செயல்பட வேண்டும் என்றார்.