தேர்தல் செலவுகளை ஒழுங்குபடுத்தல் தொடர்பான சட்டமூலத்தை ஒரு மாதத்திற்கு ஒத்தி வைப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில், குறித்த சட்டமூலம் தொடர்பில் நேற்று பாராளுமன்றத்தில் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் பங்குபற்றுதலுடன் விசேட கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டமை தொடர்பில் எதிர்க்கட்சி கேள்வியெழுப்பியதால் சபையில் கடும் ஆளும் எதிர்க்கட்சிக்கிடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
பாராளுமன்றம் புதன்கிழமை (18) காலை 9.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் கூடிய போது, சபாநாயகர் அறிவிப்பு நேரத்தில் இன்றையதினம் நடக்கவிருந்த பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான குழு கூட்டத்தை இரத்துச் செய்து, அதற்கு பதிலாக தேர்தல் செலவுகளை ஒழுங்குபடுத்தல் சட்டமூலம் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிவித்ததை தொடர்ந்தே சர்ச்சை ஏற்பட்டது.
சபாநாயகர் தனது அறிவிப்பில் கூறுகையில்,
இன்றைய தினம் நடத்த தீர்மானிக்கப்பட்டிருந்த பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான குழு கூட்டத்தை இரத்துச் செய்வதுடன், பாராளுமன்ற கட்சித் தலைவர்கள், அவர்களின் பிரதிநிதிகள் மற்றும் பாராளுமன்ற நடவடிக்கைகள் குழு உறுப்பினர்களுடன் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் தேர்தல் செலவுகளை கட்டுப்படுத்தல் தொடர்பான சட்டமூலம் தொடர்பாக கலந்துரையாடுவதற்காக விசேட கூட்டம் நடக்கவுள்ளது என அறிவித்தார்.
இதனை தொடர்ந்து ஒழுங்குப் பிரச்சினையை முன்வைத்து எழுந்த எதிர்க்கட்சி பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல, எங்களுக்கு பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான குழு கூட்டத்தையே நடத்த வேண்டும்.
குறித்த சட்டமூலத்தை ஒரு மாதத்திற்கு ஒத்தி வைப்பதாக கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் முடிவு எடுத்து நீதி அமைச்சர் அறிவித்துள்ள நிலையில் அது தொடர்பில் அவருக்கு ஏசியுள்ளனர். குழு கூட்டங்கள் தொடர்பில் சபாநாயகரே முடிவெடுக்க வேண்டும். வேறு யாரும் தீர்மானிக்க முடியாது என்றார்.
இதற்கு விளக்கமளித்த நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ கூறுகையில்,
எனக்கு தொலைபேசி அழைப்பெடுத்ததாக கூறுகின்றனர். அதனை கேட்டவர்கள் யார்? நானும் ஜனாதிபதியும் கலந்துரையாடினோம். பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான கூட்டத்தில் குறித்த சட்டமூலத்தை உள்ளூராட்சி சபை தேர்தலுக்கு தொடர்புபடாது என்றால் அதனை எடுக்கலாம்.
ஆனால் எதிர்க்கட்சி இதுதொடர்பில் சந்தேகிப்பதால், அவர்களின் ஆதரவும் இதற்கு தேவை என்பதால், எ அதனை ஒத்தி வைக்க தீர்மானித்தோம்.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுடனும் நாங்கள் கலந்துரையாடினோம். இந்த சட்டமூலத்திற்கு எதிர்க்கட்சியே கைகளை உயர்த்த வேண்டும்.
இல்லையென்றால் ஊழல் தேர்தல் முறையை நடத்திச் செல்ல வேண்டும் என்று கூறுகின்றார்களா? குறித்த சட்டமூலம் ஏற்கனவே நிகழ்ச்சி நிரலில் இருப்பதால் இது தொடர்பில் கதைப்போம் என்று ஜனாதிபதியும் பிரதமரும் கூறினர். இது தொடர்பில் பேசுவதால் என்ன பிரச்சினை உள்ளது என்றார்.
இதனை தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேதாச கூறுகையில்,
தேர்தல் செலவுகளை கட்டுப்படுத்தும் சட்டமூலம் தொடர்பில் ஆலோசனை கூட்டத்தில் இதனை ஒத்தி வைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக நீதி அமைச்சர் கூறினார்.
இதனை நிறைவேற்றினால் குறித்த காலத்திற்குள் தேர்தலை நிறைவேற்ற முடியாது போகலாம் என்ற சந்தேகங்கள் எதிர்க்கட்சிக்கு இருப்பதால் அதனை ஒத்தி வைப்பதாக கூறினார்.
ஆனால் சட்டமூலம் தொடர்பில் எங்களுக்கு பிரச்சினை இல்லை. இதனை செயற்படுத்தும் நேரம் தொடர்பிலேயே பிரச்சினை உள்ளது. இவர்கள் நடக்கவுள்ள உள்ளூராட்சி தேர்தலுக்கு பாதிப்பு இல்லை என்று கூறினாலும் நிறைவேற்றிய பின்னர் அதனை வைத்து தேர்தலை ஒத்தி வைக்க நடவடிக்கை எடுக்கலாம். மக்களின் இறைமை மற்றும் சர்வஜன வாக்குரிமையை மீறும் சூழ்ச்சியே இது.
இது ஹிட்டலர் முசலிகளின் நாடு அல்ல. ஜனநாயக நாடே. இதில் நீதி அமைச்சர் சூழ்ச்சிகளுக்குள் சிக்கிவிடக் கூடாது. இதனை ஒரு மாதத்திற்கு ஒத்தி வைத்துவிட்டு இப்போது எப்படி இந்த கூட்டத்தை நடத்த முடியும். ஜனநாயகத்தை மீற முயற்சித்தால் நாட்டு மக்களுக்காக நாங்கள் வீதிக்கு இறங்குவோம் என்றார்.
இதன்போது ஜே.வி.பி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் சமிந்த விஜேசிறி ஆகியோர் பிரதமர், நீதி அமைச்சர், சபைமுதல்வர் ஆகியாேருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

