தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தியாவின் சொல்லைக் கேட்கும் – கோத்தபாய ராஜபக்ச

275 0

இந்தியாவிற்கு எதிராக ஒருபோதும் இலங்கை மண்ணைப் பயன்படுத்துவதற்கு நாங்கள் அனுமதிக்கமாட்டோம் என இந்தியாவிற்கு உத்தரவாதம் வழங்கியதாக முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் சீன அரசாங்கத்தின் முதலீட்டை இந்திய அரசாங்கம் விரும்பவில்லை என்று சுட்டிகாட்டியுள்ளார்.

இதேவேளை, மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தை இந்தியா நம்பவில்லை. மேற்குலகின் தலையீடுகளால் இந்திய அரசாங்கம் மகிந்த அரசுக்கு எதிராகச் செயற்பட முடிவு செய்தது.

இந்தியாவுடனான எதிர்கால உறவுகள் மிகவும் முக்கியமானது என்பதை ஆரம்பத்திலேயே நாம் உணர்ந்திருந்தோம். இதனால் இந்தியாவுடனான உறவை தொடர்ந்தும் தக்கவைத்துக் கொள்ள அந்நாட்டோடு முயற்சி செய்திருந்தோம்.

எனினும் துரதிஸ்டவசமாக, இந்தியாவில் அரசாங்கம், காங்கிரசிடம் இருந்து பாஜகவிடம் மாறியது. புதிய அரசாங்கத்தின் சில அதிகாரிகள் சீனாவுடனான எமது உறவுகளை தவறாகப் புரிந்து கொண்டனர்.

ஒரு முறை இந்தியாவிலும், ஒரு முறை இலங்கையிலும் இரண்டு தடவைகள் நான் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவலைச் சந்தித்தேன்.

அந்தச் சந்தர்ப்பங்களில் அவர், இலங்கையில் சீனாவின் முதலீடுகள் குறித்து தாங்கள் மகிழ்ச்சியடையவில்லை என்று என்னிடம் கூறினார்.

நாம் துறைமுக நகரத் திட்டத்தை நிறுத்தி, அம்பாந்தோட்டை துறைமுகத்தின் முழுக் கட்டுப்பாட்டையும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அவர் என்னிடம் திட்டவட்டமாக கூறினார்.

கொழும்பு துறைமுக தெற்கு கொள்கலன் முனையத்தின் முழு செயற்பாடுகளையும் எம்மை மீளப் பொறுப்பேற்க வேண்டும் என்றும் கேட்டார்.

சீனாவுடனான எமது உறவுகள் வித்தியாசமானது, நாம் சீனாவுடன் நீண்டகால இராஜதந்திர உறவுகளை வைத்திருக்கிறோம்.

இந்தச் சந்தர்ப்பத்தில் எமது பொருளாதார அபிவிருத்திக்கு உதவக் கூடிய நிலையில் உள்ள ஒரே நாடு சீனா தான். எமக்கு அபிவிருத்தி அவசியம் தேவை. அதனால் இந்த உதவிகளை நாம் ஏன் பயன்படுத்திக் கொள்ளக் கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை மேற்குலகின் தலையீடுகளால் மகிந்த அரசாங்கத்திற்கு எதிராக செயற்பட வேண்டிய நிலைக்கு இந்திய தள்ளப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தியாவின் சொல்லைக் கேட்கும் என்றும் கோத்தபாய ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில் விடுதலைப்புலிகள் உடனான போரின் போது, இந்தியாவிலிருந்து கடுமையான பயிற்சியும், சீனா, பாகிஸ்தான், உக்ரைன் மற்றும் இஸ்ரேலிலிருந்து பெரும்பான்மையான ஆயுதங்களும் கிடைக்கப் பெற்றதாலேயே போரில் வெற்றிக்கொள்ள முடிந்தது கோத்தபாய ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை இராணுவத்திற்கு இந்திய அரசு மிகவும் கடுமையான பயிற்சியை வழங்கியது என்றும், ஆனால், தமிழ்நாட்டில் ஏற்பட்ட எதிர்ப்பு காரணமாக ஆயுதங்களை வழங்கவில்லை.

இலங்கையில் நடந்த யுத்தத்திற்கு, சீனா அளித்த ஆயுதங்களையே முழுமையாக நம்பி செயல்படும் நிலை இருந்ததாக கூறிய கோத்தபய ராஜபக்ச, பாகிஸ்தான், இஸ்ரேல், ரஷ்யா மற்றும் உக்ரைன் உள்ளிட்ட நாடுகள் ஆயுதங்களை வழங்கியதோடு, விமானப்படை தாக்குதல்களுக்கு உறுதுணையான போர் விமானங்களை வழங்கி உதவியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.