‘மிஸ் யூனிவர்ஸ்’ பட்டத்தை வென்றார் அமெரிக்காவின் ரபோனி கேப்ரியல்: பட்டம் சூட்டினார் ஹர்னாஸ்

177 0

மிஸ் யூனிவர்ஸ் எனப்படும் பிரபஞ்ச அழகி பட்டத்தை அமெரிக்க அழகி ரபோனி கேப்ரியல் வென்றார். அவருக்கு கடந்த 2021-ல் மிஸ் யூனிவர்ஸ் பட்டம் வென்ற இந்திய அழகி ஹர்னாஸ் சாந்து பட்டம் சூட்டினார். கடந்த 10 ஆண்டுகளில் அமெரிக்க அழகி வெல்லும் முதல் பட்டம் இது. அந்த நாட்டின் சார்பில் வெல்லப்பட்டுள்ள ஒன்பதாவது பட்டம்.

மொத்தம் 84 நாடுகளை சேர்ந்த அழகிகள் இந்த முறை பட்டம் வெல்லும் நோக்கில் பங்கேற்றனர். இதில் இந்தியா சார்பில் மங்களூருவை சேர்ந்த 25 வயதான திவிதா ராய் பங்கேற்றார். இதில் டாப் 16 அழகிகளில் ஒருவராக அவர் இடம் பிடித்தார்.

இந்தப் போட்டியில் மிஸ் யூனிவர்ஸ் 2022-க்கான பட்டத்தை அமெரிக்காவை சேர்ந்த 28 வயதான ரபோனி கேப்ரியல் தேர்வு செய்யப்பட்டார். இரண்டாவது இடத்தை 23 வயதான வெனிசுலா அழகி அமண்டா டுடாமெல் பிடித்தார். மூன்றாவது இடத்தில் டொமினிக்கன் குடியரசை சேர்ந்த ஆண்ட்ரீனா மார்டினஸ் பிடித்தார்.

புதிய மிஸ் யூனிவர்ஸாக தேர்வாகி உள்ள ரபோனி கேப்ரியலுக்கு பட்டம் சூட்டி அசத்தினார் கடந்த முறை பட்டம் வென்ற இந்தியாவின் ஹர்னாஸ் சாந்து.