இடைநீக்கத்தை எதிர்த்து கூடுதல் டிஜிபி தொடர்ந்த வழக்கை 3 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க மத்திய நிர்வாக தீர்ப்பாயத்துக்கு உத்தரவு

282 0

தனது இடைநீக்க உத்தரவை எதிர்த்து சிறப்பு கூடுதல் டிஜிபியான ராஜேஷ் தாஸ் தொடர்ந்துள்ள வழக்கை 3 மாதங்களில் விசாரித்து முடிக்க மத்திய நிர்வாக தீர்ப்பாயத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பெண் ஐபிஎஸ் அதிகாரி ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக சிறப்பு கூடுதல் டிஜிபியாக பணிபுரிந்த ராஜேஷ்தாஸ் மீது புகார் கூறப்பட்டது. இதுதொடர்பாக விசாரிக்க ஐஏஎஸ் அதிகாரி ஜெய ரகுநந்தன் தலைமையில் விசாகா குழு அமைக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு, விழுப்புரம் நீதிமன்றத்தில் விசாரணை நிலுவையில் உள்ளது. இதனிடையே, 2021-ம் ஆண்டு மார்ச்மாதம் ராஜேஷ்தாஸ் பணியிடைநீக்கம் செய்யப்பட்டார்.

மத்திய அரசுக்கு நோட்டீஸ்: இந்த இடைநீக்கத்தை ரத்து செய்து தன்னை மீண்டும் பணியமர்த்தக் கோரி, சென்னை மத்தியநிர்வாக தீர்ப்பாயத்தில் ராஜேஷ்தாஸ் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், இதுகுறித்து மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கை விரைந்து முடிக்க உத்தரவிடக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் ராஜேஷ் தாஸ் மனுதாக்கல் செய்தார். எந்த காரணமும் இல்லாமல் தனது இடைநீக்கஉத்தரவு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருவதாகவும், மத்திய நிர்வாக தீர்ப்பாயமும் வழக்கு விசாரணையை தள்ளி வைத்துக்கொண்டே செல்வதாகவும் மனுவில் தெரிவித்திருந்தார்.இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் வி.எம்.வேலுமணி, ஆர்.ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு,மனுதாரர் தொடர்ந்துள்ள வழக்கைமத்திய நிர்வாக தீர்ப்பாயம் 3 மாதங்களில் விசாரித்து முடிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர். மேலும், இதுதொடர்பாக மத்திய அரசும் இருவாரங்களில் பதிலளிக்க நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.