மின்கட்டணத்தை மீண்டும் அதிகரித்தால் அனைத்து தொழிற்சங்கங்களையும் ஒன்றிணைத்து நாடளாவிய ரீதியில் பாரிய ஹர்த்தால் நடவடிக்கையில் ஈடுபடுவோம்.
மின்கட்டண அதிகரிப்பு யோசனையை ஒருவாரம் பிற்போடுவதல்ல. யோசனையை முழுமையாக நீக்கிக் கொள்ள வேண்டும் என ஒன்றிiணைந்த மின்சாரத்துறை தொழிற்சங்க தலைவர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்தார்.
மின்கட்டண அதிகரிப்பு தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் அனுமதி இல்லாமல் மின்சாரத்துறை அமைச்சர் தான்தோன்றித்தனமான முறையில் மின்கட்டணத்தை அதிகரிக்க முயற்சிக்கிறார்.
மின்சார கட்டமைப்பு எதிர்கொண்டுள்ள நிதி நெருக்கடி தொடர்பில் அமைச்சர் நாட்டு மக்களை தவறாக வழிநடத்துகிறார்.
மின்சார சபை நட்டமடைவதற்கான உண்மை காரணத்தை அவர் நாட்டு மக்களுக்கு குறிப்பிட வேண்டும். கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் மின்சார கட்டணம் அதிகரிக்கப்பட்டதால் மின்பாவனைக்காக கேள்வி 15 சதவீதத்தால் குறைவடைந்துள்ளது.
மின்சார கட்டணத்தை மீண்டும் அதிகரித்தால் மின்பாவனைக்கான கேள்வி முழுமையாக பாதிக்கப்பட்டு முழு மின்சார கட்டமைப்பும் மின் சேவை முழுமையாக பாதிக்கப்படும்.
அமைச்சர் கஞ்சன விஜேசேகர இன்னும் எத்தனை நாட்களுக்கு மின்சாரத்துறை அமைச்சராக பதவி வகிப்பார் என்று குறிப்பிட முடியாது. இவர்களின் முறையற்ற செயற்பாடுகளினால் மின்சாரத்துறை கட்டமைப்பை நெருக்கடிக்குள்ளாக்க இடமளிக்க முடியாது.
அவர் பதவி விலகியதும் அவர் எடுத்த தீர்மானங்களுக்கு அவர் பொறுப்பு கூற போவதில்லை. மின்கட்டணத்தை அதிகரிக்கும் யோசனையை அமைச்சரவை ஒருவார காலத்திற்கு பிற்போட்டுள்ளது.
யோசனையை ஒத்திவைப்பதல்ல. அதனை முழுமையாக இரத்து செய்ய வேண்டும்.மின்கட்டணத்தை அதிகரித்தால் அனைத்து தொழிற்சங்கத்தையும் ஒன்றிணைத்து நாடளாவிய ரீதியில் ஹர்த்தாலில் ஈடுபடுவோம்.
அது அரசாங்கத்திற்கு பாரிய நெருக்கடியை ஏற்படுத்தும். ஏனெனில் ஜனாதிபதி மற்றும் அவர் தலைமையிலான இந்த அரசாங்கத்திற்கு மக்களாணை சிறிதளவேனும் கிடையாது என்றார்.

