சீனாவுடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் விரைவில் கையெழுத்திடுவதே அரசாங்கத்தின் இலக்கு

161 0

நாட்டில் நிலவும் டொலர் நெருக்கடிக்கு ஏதேனுமொரு வகையில் தீர்வு காணப்படாவிட்டால் இறக்குமதி நடவடிக்கைகள் பாதிக்கப்படும்.

இந்த பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண்பதற்கான சிறந்த வழி இயன்றவரை பல்வேறு நாடுகளுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதாகும்.

சீனாவுடன் விரைவில் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதே அரசாங்கத்தின் இலக்காகும் என்று அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு செவ்வாய்கிழமை (03) இடம்பெற்ற போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில் ,

நாட்டில் தற்போது காணப்படும் பாரிய பிரச்சினை டொலர் நெருக்கடியாகும். இதன் காரணமாக எமக்கு வெளிநாட்டு கடன் மற்றும் வட்டியை செலுத்த முடியாத நிலைமை காணப்படுகிறது.

சுதந்திரத்தின் பின்னரான 74 ஆண்டுகளில் மிகவும் தீர்க்கமான கால கட்டத்திலேயே நாம் தற்போது இருக்கின்றோம். அத்தோடு சர்வதேச மட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களான மோடி மற்றும் பிட்ச் ரேட்டிங் என்பவற்றின் தரப்படுத்தலில் இலங்கை தொடர்ந்தும் பின்தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறது.

இதற்கு அரசியல் ரீதியில் எந்தவொரு தீர்வினையும் வழங்க முடியாது. எம்மால் விடுக்கப்படும் கடன் சான்று பத்திரங்களை ஏனைய நாடுகள் ஏற்றுக் கொள்ளாவிட்டால் அது பெரும் நெருக்கடியை தோற்றுவிக்கும்.

யார் ஆட்சி செய்தாலும் , எந்தளவு அவசியமான பொருட்களாகக் காணப்பட்டாலும் இறக்குமதி செய்ய முடியாத நிலைமை ஏற்படும். எம்மிடம் கையிருப்பில் உள்ள டொலர் பெறுமதியை அடிப்படையாகக் கொண்டே இறக்குமதி தொடர்பில் தீர்மானிக்க முடியும்.

எனவே இந்த நெருக்கடிக்கான தீர்வாக துரிதமாக டொலர் இருப்பினை அதிகரித்துக் கொள்ள வேண்டும். இதற்கு வேறு எந்த அரசியல் தீர்வும் கிடையாது.

எரிபொருள் , உரம் , இரசாயன பொருட்கள் , மருந்து வகைகள் , தொழிற்துறைக்கான மூலப்பொருட்கள் உள்ளிட்டவற்றை இறக்குமதி செய்து கொள்வதற்கான தேவை தற்போது காணப்படுகிறது.

எனவே கடன் மறுசீரமைப்புடன் ஏதேனுமொரு வகையில் டொலர் கையிருப்பை அதிகரித்துக் கொள்ளாவிட்டால் , எமது நாடு மோசமான நிலைமைக்கு தள்ளப்படும்.

மத்திய வங்கி , நிதி அமைச்சு உள்ளிட்ட அரச நிறுவனங்கள் கடன் மறுசீரமைப்புக்களுக்கான பொறுப்புக்களை வழங்கியுள்ள சர்வதேச நிறுவனங்களும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றன.

எனவே விரும்பியோ விரும்பாமலோ சர்வதேச வர்த்தக சந்தைக்குள் உள்நுழைந்து முடிந்தளவு சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். வியட்நாம் , சிங்கப்பூர் , மலேசியா, சீனா உள்ளிட்ட நாடுகள் அதிகளவில் சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன.

அவ்வாறில்லை எனில் எம்மால் ஏற்றுமதி பொருளாதாரத்தில் சர்வதேச சந்தைகளில் போட்டியிட முடியாத நிலைமை ஏற்படும். இதற்கமைவான சில தீர்மானங்களை அரசாங்கமும் முன்னெடுத்துள்ளது என்றார்.