நாணய நிதியத்தின் உதவிகள் இழுபறி நிலையிலுள்ளமைக்கு காரணம் ஸ்திரமற்ற அரசாங்கமே

166 0

நாட்டில் தற்போதுள்ள அரசாங்கம் ஸ்திரமற்றது என்பதன் காரணமாகவே சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகள் இழுபறி நிலையிலேயே உள்ளன.

எனவே அரசாங்கம் யதார்த்தத்தை உணர்ந்து தேர்தலை நடத்தி, மக்கள் விரும்பும் அரசாங்கத்தை அமைப்பதற்கு உதவ வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் திங்கட்கிழமை (ஜன.02) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கடந்த ஆண்டை விட இவ்வாண்டு 68 சதவீதத்தினால் வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கு மத்தியில் மீண்டும் மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மக்கள் மேலும் நெருக்கடிக்கு உள்ளாக்கும் ஆண்டாகவே இவ்வாண்டு அமையவுள்ளது. அரசியல் தலைவர்களால் எடுக்கப்பட்ட தவறான தீர்மானங்களே இலங்கை மின்சாரசபை நஷ்டத்தில் செல்கின்றமைக்கு பிரதான காரணியாகும். இதனை மக்கள் மீது சுமத்துவதற்கு அனுமதிக்க முடியாது.

கடந்த ஆகஸ்டில் மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டதையடுத்து மின்சார சபை பாரிய இலாபமீட்டியுள்ளது. எனினும் அதன் பின்னர் மின்சாரத்திற்கான கேள்வி குறைவடைந்துள்ளது.

இவ்வாறு கேள்வியும் , பயன்பாடும் குறைவடைந்துள்ள நிலையில் எதற்காக கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளது? இது தொடர்பில் அமைச்சு தெளிவுபடுத்த வேண்டும்.

எதிர்கால திட்டமிடல் இன்றி அரச ஊழியர்கள் ஓய்வு பெற வேண்டும் என்று கூறப்பட்டமையால், இன்று புகையிரத சேவைக்கு பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அரசாங்கம் இது தொடர்பில் முன்னரே அறிந்திருக்கவில்லையா? நாட்டைப் பற்றிய சிறிதளவும் சிந்தனையற்ற இந்த அரசாங்கத்திற்கு சர்வதேச நாணய நிதியம் எவ்வாறு உதவும்?

இந்த அரசாங்கம் ஸ்திரமற்றது என்பதன் காரணமாகவே சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகள் கிடைக்கப் பெறாமலுள்ளன. எனவே அரசாங்கம் யதார்த்தத்தை உணர்ந்து தேர்தலை நடத்தி, மக்கள் விரும்பும் அரசாங்கத்தை அமைப்பதற்கு உதவ வேண்டும் என்றார்.