நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் நீராடச் சென்ற 16 மற்றும் 17 வயது களுடைய மூவர் உள்ளிட்ட நால்வர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காணாமல் போயுள்ளார். இந்தச் சம்பவங்கள் திங்கட்கிழமை (01) இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
மாத்தறை கடலில் நீராடச் சென்ற நால்வரில் 17 வயதுடைய இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
கடலில் நீராடச் சென்ற நான்கு இளைஞர்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் இராணுவ படையின் இடர் அனர்த்த முகாமைத்துவ பிரிவினரால் அவர்கள் நால்வரும் மீட்கப்பட்டு மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் அதில் இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் 17 வயதுடையவர்கள் எனவும் அவர்கள் அகுரஸ்ஸ பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, மொரந்த ஓய பகுதியில் நீராடச் சென்ற 16 வயதுடைய சிறுவன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
தனது நண்பர்களுடன் நீராடச் சென்ற போது குறித்த சிறுவன் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.
இதன்போது பிரதேசவாசிகளால் மீட்கப்பட்டு பொல்கொல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் 16 வயதுடைய மடஹபொல, மொரத்த பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவராவார்.
மேலும் கண்டி, கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஹல்லொழுவ, வராதென்ன பிரதேசத்தில் மகாவலி கங்கையில் நீராட சென்ற ஒருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளார்.
இவ்வாறு காணாமல் போனவர் 29 வயதுடைய ஹல்லொழுவ பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவராவார்.
குறித்த நபர் நண்பர்கள் சிலருடன் மதுபானம் அருந்தி விட்டு பின்னர் மகாவலி கங்கையில் நீராட சென்றுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காணாமல் போனவரை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் நிகவரட்டிய பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் உள்ள கால்வாய் ஒன்றில் நீராடச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் 70 வயதுடைய பலகொல்லாகம பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவராவார்.

