தமிழக அரசு அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு 4 சதவீதம் அகவிலைப்படி உயர்வு

205 0

அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அகவிலைப்படி ஜன. 1-ம் தேதி முதல் 34 சதவீதத்தில் இருந்து 38 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது. அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பெரும்பணியில் தங்களை அர்ப்பணித்துச் செயல்படும் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் பங்கை திமுக அரசு முழுமையாக உணர்ந்து, அவர்களின் நலனைத் தொடர்ந்து பாதுகாத்து வருகிறது.

முந்தைய அரசு விட்டுச் சென்ற கடும் நிதி நெருக்கடி மற்றும் கடன் சுமைக்கு இடையிலும், அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகள் குறித்த வாக்குறுதிகளைப் படிப்படியாக நிறைவேற்ற தமிழக அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

அந்த வகையில், அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் கோரிக்கையான அகவிலைப்படி உயர்வு குறித்து கனிவுடன் பரிசீலித்து, அகவிலைப்படி உயர்வை ஜன. 1-ம் தேதி முதல் செயல்படுத்த அரசு முடிவெடுத்துள்ளது.