கிளிநொச்சியில் போதைப் பொருளை கட்டுப்படுத்துமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டம்

57 0

கிளிநொச்சி முட்கொம்பன் பிரதேசத்தில் இடம்பெற்று வரும் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி மற்றும் போதைப் பொருளை கட்டுப்படுத்துமாறு கோரியும் குறித்த  பிரதேசத்தில் பொலிஸ் காவலரண்  அமைக்க கோரியும் இன்று (31) கவனயீர்ப்பு  போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலாளர்  பிரிவு உட்பட்ட முட்கொம்பன்  பிரதேசத்திற்குட்பட்ட பகுதியிலுள்ள  ஐந்துக்கு மேற்பட்ட கிராமங்களில் வாழ்ந்து வரும் மக்கள் இவ்வாறு சட்ட விரோத கசிப்பு  உற்பத்தி மற்றும் விற்பனைகள் போதைப் பொருள் பாவனை  என்பவற்றால் அதிக  குடும்பங்கள்  பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

குறித்த  பகுதியில்   இவ்வாறான போதைப் பொருள் பாவனையால் இளவயது திருமணங்கள் குடும்ப வன்முறைகள் சிறுவர் துன்புறுத்தல் சம்பவங்கள் என  பல்வேறு சம்பவங்கள் அதிகரித்து காணப்படுவதாகவும், குறித்த பிரதேசத்தில் இடம்பெறுகின்ற சட்டவிரோத கசிப்பு உற்பத்தி விற்பனைகளை கட்டுப்படுத்துமாறு கோரி  வடக்கு மாகாண ஆளுநர் மற்றும் பொலிஸ் உயரதிகாரிகள் மாவட்ட அரச அதிபர் ஆகியோருக்கு ஏற்கனவே மகஜர்கள்  கையளிக்கப்பட்டிருந்த போதும் இது  தொடர்பில்  இதுவரை எந்தவித நடவடிக்கைகளும் எடுக்காமையை கண்டித்தும் குறித்த பிரதேசத்தில் இடம் பெறக்கூடிய சட்டவிரோத கசிப்பு உற்பத்தி விற்பனைகளை கட்டுப்படுத்தி இளம் சமூகத்தை பாதுகாக்க கோரியும் குறித்த பிரதேசத்தில் பொலிஸ்  காவலரண்  அமைக்குமாறு கோரியும்  குறித்த  கவனயீர்ப்பு போராட்டம்  முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த போராட்டமானது இன்று பகல் 10.30 மணிக்கு முட்கொம்பன்  சந்தை முன்றலிலிருந்து ஆரம்பமாகி முட்கொம்பன் மகா வித்தியாலய சந்திவரை சென்று குறித்த போராட்டம் முடிவடைந்தது. குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் சிறுவர்கள் மீதான துஷ்பிரியோகங்கள் மற்றும்  பெண்களின் பாதுகாப்பு போன்ற விடயங்களில் உரிய தரப்புகள் கவனம் எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.