தமிழகத்தில் போலி மருத்துவர்களை கண்டறியும் சோதனை நடந்து கொண்டிருக்கிறது என்று டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்தார்.
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரிமருத்துவமனையில் நரம்பியல் அறுவை சிகிச்சை துறை சார்பில், நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கான கருத்தரங்கு மற்றும் பயிற்சி முகாம் நேற்றுநடந்தது. மருத்துவமனை டீன் சாந்திமலர் தலைமையில் நடந்த கருத்தரங்கை, டிஜிபி சைலேந்திரபாபு தொடங்கி வைத்தார்.
நரம்பியல் அறுவை சிகிச்சை துறையில் சிறப்பாக பணியாற்றிவர்களுக்கு பரிசுகளையும் வழங்கினார். இதில், மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள் பலர் பங்கேற்றனர்.
கருத்தரங்கை தொடங்கி வைத்து டிஜிபி சைலேந்திரபாபு பேசியதாவது:
மருத்துவர்கள் ஆரோக்கியமாக இருந்தால்தான்பொதுமக்கள் நலமுடன் வாழ முடியும். உண்மையான சேவை மனப்பான்மை கொண்டுள்ள மருத்துவர்கள் அரசு மருத்துவமனைகளில்தான் உள்ளனர். எனக்கும் மருத்துவராக வேண்டும் என்ற ஆசைஇருந்தது. ஆனால், மக்களை காக்கும் போலீஸ்காரராக ஆகிவிட்டேன்.
தற்போது லட்சக்கணக்கான இளைஞர்கள் மருத்துவராக வரவேண்டும் என்று நினைக்கிறார்கள். இது ஆரோக்கியமானது. தமிழகத்தில் போலி மருத்துவர்களை கண்டறியும் சோதனைநடந்து கொண்டிருக்கிறது மருத்துவத் துறையில் தொழில்நுட்பம் பெருமளவில் வளர்ச்சி கண்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

