அரசமைப்பை உருவாக்குவதற்கான இடைக்கால வரைபை ஆராய சு.க சம்மதம்

300 0

புதிய அரசமைப்பு உருவாக்கத்துக்கான முயற்சிகளுக்கு இடையில் குழப்பத்தை, முட்டுக்கட்டையை ஏற்படுத்திய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, தற்போது வழிக்குத் திரும்பியது.

ஏற்கனவே தயாரிக்கப்பட்ட இடைக்கால வரைபை வழிகாட்டல் குழுவில் ஆராய்வதற்கு அந்தக் கட்சி இணக்கம் வெளியிட்டுள்ளதுடன்.புதிய அரசமைப்பை உருவாக்குவதற்காக வழிநடத்தல் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழுவின் 49ஆவது கூட்டம், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெற்றது.

குறித்த வழிநடத்தல் குழுவின் கடந்த கூட்டத்தில் பங்கெடுக்காமல் தவிர்த்த, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பங்கெடுத்திருந்தனர்.

அத்துடன், வழிநடத்தல் குழுவினால் ஏற்கனவே தயாரிக்கப்பட்டிருந்த இடைக்கால வரைபை ஆராய்வதற்கு, ஏற்றுக்கொள்வதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கடந்த வருடம் டிசம்பர் மாதத்திலிருந்து பின்னடித்து, நழுவல் போக்கைக் கடைப்பிடித்து வந்தது.

இதனால் வழிநடத்தல் குழுவின் கூட்டம் கூடுவதும் கலைவதுமாக, எந்தவொரு முக்கிய முடிவும் எடுக்கப்படாமல் இழுதடிக்கப்பட்டு வந்தன.

இவ்வாறானதொரு நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கூட்டத்தில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இடைக்கால வரைபை ஆராய்வதற்கு இணக்கம் தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் முக்கிய விடயங்கள் ஆராயப்பட்டுள்ளன.

எதிர்வரும் மார்ச் மாதம் 7ஆம் மற்றும் 8ஆம் திகதிகளில் வழிநடத்தல் குழுவின் அடுத்த கூட்டங்கள் நடைபெறவுள்ளன.

மேலும், இந்தக் கூட்டங்களில் வரைபு ஆராயப்பட்டு முற்றுப் பெற்றால் விரைவிலேயே நாடாளுமன்றத்துக்கு, அரசியல் நிர்ணய சபைக்கு அது சமர்ப்பிக்கப்படும் என குறிப்பிடப்படுகின்றது.