எவரும் எமக்கு சவாலில்லை

189 0

ஐக்கிய தேசிய கட்சியும் , ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் இணைவது எந்த வகையிலும் ஐக்கிய மக்கள் சக்திக்கு சவாலாக அமையாது.

இவ்விரு கட்சிகள் மாத்திரமின்றி எந்தவொரு கட்சியும் தமக்கு சவாலாக இல்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தனாயக்க தெரிவித்தார்.

ஐ.தே.க., பொதுஜன பெரமுன கூட்டணி தொடர்பில் வினவிய போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

ஐக்கிய தேசிய கட்சியும் , ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் இணைந்து கூட்டணியமைக்கவுள்ளதாக அந்த கட்சிகளின் பொதுச் செயலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும் அவர்களின் அறிவிப்பு எமக்கு எந்த வகையில் சவாலாக அமையாது. ஐ.தே.க. மற்றும் பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகளுமே மக்கள் செல்வாக்கற்ற கட்சிகளாகியுள்ளன.

இவ்வாறு மக்கள் செல்வாக்கினை இழந்த இரு கட்சிகளும் ஒன்றிணைவதால் மீண்டும் பலம் பெற முடியாது. இவ்விரு கட்சிகளும் ஒன்றிணைவதால் மக்கள் மத்தியில் செல்ல முடியும் என்று எண்ணுகின்றனர். இவர்கள் கிராமங்களுக்கு செல்லும் போது மக்களின் மனநிலையை அறிந்து கொள்ளலாம்.

யானையும் , மொட்டும் இணைவதால் ஐக்கிய மக்கள் சக்திக்கு எவ்வித சவாலும் ஏற்படப் போவதில்லை. எமக்கு சவாலை ஏற்படுத்தக் கூடிய இயலுமை அவர்களுக்கு இல்லை.

அடுத்த தேர்தல்களில் எந்தவொரு கட்சியும் எமக்கு சவாலாக இல்லை. சிலர் ஜே.வி.பி. தொடர்பில் கூறுகின்றனர். எனினும் ஜே.பி.வி. எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கதைகளைக் கூறிக் கொண்டிருக்கும் கட்சியாக மாத்திரமே உள்ளது.

யதார்த்த அரசியல் ஈடுபடுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு அவர்கள் இன்னும் முயற்சிக்கவில்லை.

ஐக்கிய மக்கள் சக்தி எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஐக்கிய தேசிய கட்சியுடன் ஒப்பந்தங்களை ஏற்படுத்திக் கொள்ளப்போவதில்லை. எனினும் தேசிய பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல்கள் , வேலைத்திட்டங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பினை வழங்குவோம்.

நாட்டுக்காகவும் , நாட்டு மக்களுக்காகவும் செயற்படுத்தப்படும் எந்தவொரு பொது வேலைத்திட்டத்திற்கும் நாம் எமது ஒத்துழைப்புக்களை வழங்க தயாராகவுள்ளோம். மாறாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவையும் , அவரது அரசாங்கத்தையும் பாதுகாக்கும் எந்தவொரு வேலைத்திட்டத்திற்கும் நாம் ஆதரவளிக்கப் போவதில்லை என்றார்.