சினிமா இறுவெட்டு (சீடி) கடை என்ற போர்வையில் பல்கலைக்கழக மற்றும் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்பனையில் சூட்சுமமாக ஈடுபட்டதாக கூறப்படும் சந்தேக நபரை கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாண்டிருப்பு பிரதான வீதியில் உள்ள சினிமா இறுவெட்டு (சீடி) கடை ஒன்றில் சந்தேகத்திற்கிடமாக இளைஞர்கள் ஒன்று கூடுவது தொடர்பில் ஞாயிற்றுக்கிழமை (டிச.25) இரவு விசேட அதிரடிப்படையினருக்கு தகவல் ஒன்று கிடைத்தமைக்கமைய இச்சோதனை நடவடிக்கையை கல்முனை விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்டனர்.
இதன்போது இறுவெட்டு (சிடி) கடை என்ற போர்வையில் போதை தரும் மாவா விற்பனையில் சூட்சுமமாக ஈடுபட்ட கண்டி மாவட்டம் மடவளை பகுதியை சேர்ந்த 25 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர் வசம் இருந்து மாவா போதைப்பொருள் அடங்கிய பக்கெற்றுக்கள் மீட்கப்பட்டது.
நடவடிக்கைக்காக பாரப்படுத்தியதுடன் விசேட அதிரடிப்படையினர் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து 1 கிலோ 440 கிராம் மாவா போதைப்பொருள் மற்றும் மாவாவிற்கு கலக்கப்படும் இரசாயன 18 ரின்களும் மீட்கப்பட்டுள்ளதாக கல்முனை விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் கைதான சந்தேக நபரை கல்முனை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த பெரிய நீலாவணை பொலிஸாரிடம் ஒப்படைக்க விசேட அதிரடிப்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மேலும் இப்பகுதியில் கஞ்சா கலந்த மாவா பயன்பாடு அதிகளவாக இளைஞர்களை ஆக்கிரமித்துள்ளதாகவும் இதில் பல்கலைக்கழக மாணவர்கள் பாடசாலை மாணவர்கள் என பலரும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் குற்றச்சாட்டுக்களை கடந்த காலங்களில் முன்வைத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இது தவிர மாவாவை நுகர்வுக்காக தமது கையிருப்பில் வைத்திருந்த நிலையில் இளைஞர்கள் சிலரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன் கைது செய்யப்பட்ட இளைஞர்களிடம் மாவா கொள்வனவு செய்தது தொடர்பில் மேலதிக விசாரணைகளையும் விசேட அதிரடிப்படையினர மேற்கொண்டு வருகின்றனர்.

