திருடப்பட்ட சம்பவம் -களுமல்லி, கொண்டையா கைது

184 0

பம்பலப்பிட்டி – ஸ்கெல்டன் வீதியிலுள்ள கோடீஸ்வர வர்த்தகர் ஒருவரின் வீட்டில் இருந்து உரிமம் பெற்ற கைத்துப்பாக்கி 12  தோட்டாக்களுடன் கூடிய மகசீன் உள்ளிட்ட 25 கோடி ரூபாபெறுமதி வாய்ந்த உள்நாட்டு, வெளிநாட்டு நாணயங்கள், தங்க ஆபரணங்கள்,  மாணிக்கக் கற்கள் உள்ளிட்டவை திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் இருவரை  பொலிஸார்  கைது செய்துள்ளனர்.

பம்பலப்பிட்டி மற்றும் பொரளை பொலிஸார் இணைந்து முன்னெடுத்த விசாரணைகளில்  குறித்த இரு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாட்டில் பதிவு செய்யப்பட்ட குற்றவாளியான (ஐ.ஆர்.சி) ஹோகந்தர பகுதியைச் சேர்ந்த  களு மல்லி,  கொமனா, விரிது ருவன்,  பெல்லா போன்ற பெயர்களால் அறியப்படும்  ஜயகொடிகே ருவன் பிரேம குமார,  தனுஷ்க அல்லது கொண்டயா எனும் பெயர்களால் அறியப்படும் கொம்பனித் தெருவை சேர்ந்த நபருமே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் கூறினர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து, குறித்த கோடீஸ்வர வர்த்தகர் வீட்டிலிருந்து திருடப்பட்டதாக கூறப்படும்  பொருட்களில், 380 கிராம் நிறையுடைய தங்க ஆபரணங்கள்,  10 ஆயிரம் அமெரிக்க டொலர்,  ஒரு இலட்சத்து தொள்ளாயிரத்து ஐம்பது ஜப்பான் யென்,  ரொலெக்ஸ் கைக்கடிகாரம்,  மாணிக்கக் கற்கள், 174 இலட்சம் ரூபா பணம், கைத்துப்பாக்கி உள்ளிட்டவை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.

அத்துடன் சந்தேக நபர்களிடமிருந்து 10 கிராம் ஹெரோயின் போதைப் பொருளும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் கூறினர்.

கடந்த 16 ஆம் திகதி குறித்த கோடீஸ்வர வர்த்தகரின் பம்பலப்பிட்டி – ஸ்கெல்டன் வீதியிலுள்ள 3 மாடி வீட்டின் மூன்றாவது மாடிக்குள் நுழைந்து  25 கோடி ரூபா வரையிலான பெறுமதி மிக்க பொருட்கள், உள் நாட்டு வெளிநாட்டு நாணயங்கள்  திருடப்பட்டுள்ளன.

கோடீஸ்வர வர்த்தகர், அவரது மனைவி மற்றும் அவர்களது மகனின் மனைவிக்கு சொந்தமான உடமைகளே இவ்வாறு திருடப்பட்டிருந்தன.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் கொழும்பு தெற்கு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் சிசிர பெத்ததந்திரியின் ஆலோசனைக்கு அமைய பம்பலபிட்டி மற்றும் பொரளை பொலிஸார் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்தனர்.

இதன்போது வர்த்தகரின் வீட்டில் பதிவாகியிருந்த சி.சி.ரி. காணொளி ஒன்றில், திருடப்பட்ட உடமைகளை பையொன்றில் இட்டு நபர் ஒருவர் தோளில் சுமந்து செல்லும் காட்சி பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த சி.சி.ரி.வி. காணொளியை மையப்படுத்தி, பொலிஸார் நபர் ஒருவரை மருதானை பகுதியில் வைத்து  கைது செய்தனர்.  கலு மல்லி எனும் பெயரால் அறியப்பட்ட மேலும் பல பெயர்களைக் கொண்ட இலங்கையில் பதிவு செய்யப்பட்ட குற்றவாளிகள் பட்டியலில் இருக்கும்  ஜயகொடிகே ருவன் பிரேம குமார என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டார்.

இதன்போது அவரிடம் பொலிஸார் முன்னெடுத்த விசாரணையில், கொம்பனித் தெருவை சேர்ந்த தனுஷ்க அல்லது கொண்டயா என அறியப்படும் நபரின் வழி காட்டலில், கடந்த 16 ஆம் திகதி குறித்த திருட்டை முன்னெடுத்தமையும், மூன்றாம் மாடியில் உள்ள குளியல் அறையின் காற்று சீராக்கி பகுதி ஊடாக  வீட்டுக்குள் நுழைந்து திருட்டை முன்னெடுத்தமை தொடர்பிலும் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன் அவரது உடமையில் இருந்த  திருடப்பட்ட பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.  அத்துடன் குறித்த சந்தேக நபர், தனது நண்பர்களுக்கு களவாடப்பட்ட பணத்திலிருந்து 5 ஆயிரம் ரூபா வீதம் வழங்கியுள்ளமை தொடர்பிலும் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

இதனையடுத்து பொலிஸார் தனுஷ்கவையும் கைது செய்தனர்.  அவரிடம் இருந்து களவாடப்பட்ட பணத்தில் 101 இலட்சம் ரூபாவும் கைத்துப்பாக்கியும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இந்த திருட்டு தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெறும் நிலையில், சந்தேக நபர்களை நீதிமன்றில் ஆஜர் செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.