பகிடிவதை வன்முறையை ஒழிக்கமுடியாத அரசுகளும் முதல் பலியான தமிழ் மாணவனும்

123 0

மாணவர்களின் பகிடிவதை வன்முறைகள் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது.முன்னாள் துணைவேந்தரையும் மகனையும் தாக்கும் அளவுக்கு இவை மோசமாகியுள்ளது. பல்கலைக்கழகங்கள் ஆசிரியர்கள் கல்விசார் ஊழியர்கள் மாணவர்களுக்கு பாதுகாப்பற்ற இடமாகியுள்ளது. கற்பிக்கும் ஆசான்களைத் தாக்கும் மிலேச்சத்தனமான செயற்பாடுகளை இனிமேலும் அனுமதிக்க முடியாது என பேராதனை பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கத்தலைவர் பேராசிரியர் அர்ஜுன் சம்பத் கூறியுள்ளார்.

கடந்த 13 பௌத்த பாலி பல்கலைக்கழகத்தில் பகிடிவதை தொடர்பான மோதலால் மாணவர் சங்க செயலர் தலாவ தம்மிக்க தேரர் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டார். பல்கலைக்கழக பிக்கு மாணவர்கள் தலைமுடி,தாடி வளர்த்து பௌத்த மத கோட்பாட்டை மீறுவதாகவும்,இவர்களை 3 -4 வருடங்களுக்கு பின்பு பல்கலைக்கழத்தை விட்டு வெளியேற்றும் சட்டம் கொண்டுவரப்படவேண்டும் என மிகிந்தலை விகாராதிபதி தம்மரத்தின தேரர்  கோரிக்கை விடுத்துள்ளார்.

பல்கலைக்கழக மாணவர்களில் சிலர் போதைக்கு அடிமையாகி பாலியல் குற்றம் புரிவதால் புதிய மாணவர்கள் உடல் மன வேதனைக்கு உள்ளாகி அங்கு கல்வியை தொடரமுடியாமல்  விலகுவதாகவும் பரீட்சைக்கு இவர்கள் தோற்றும் காலம் இனி மட்டுப்படுத்தப்படும் எனவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த தெரிவித்துள்ளார்.

கடந்த (10) சனி பேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் அத்துல சேனாரத்தினவும் மகனும் மாணவர்களால் தாக்கப்பட்டு படுகாயமடைந்தனர்.அவரது உத்தியோகபூர்வ இல்லத்துக்குள் பலவந்தமாக புகுந்த சுமார் 300 மாணவர்கள் தாக்கி சொத்துக்களும் சேதமாகின.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உத்தரவின்படி இவர்கள் மாணவர் தர நிலையில் இருந்தும் நீக்கப்பட்டனர்.புலமைப்பரிசில் கொடுப்பனவும் இரத்து.

பல்கலைக்கழகத்தை விட்டு முற்றாக நீக்குமாறு விரிவுரையாளர்கள் கோரியுள்ளனர்.1989 மார்ச் 8 இல் கொழும்பு பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ஸ்ரான்லி விஜயசுந்தரவின் ஜே.வி.பி.படுகொலைக்கு பின்னர் ஒரு பேராசிரியர் தாக்கப்பட்டுள்ளார்.

மனித உரிமைகள் அலுவலகம் மற்றும் பொலிஸ் பிரிவை துணைவேந்தர்களின் கீழ் பல்கலைக்கழகங்களில் இயங்க வைத்து அங்கு இடம்பெறும் சட்ட விரோத செயற்பாடுகளை விசாரணை செய்யவும், கைது செய்யவும் அதிகாரங்கள் வழங்கப்படவேண்டும் என 2015 இல் துணைவேந்தராக இங்கு இருந்தபோது அரசிடம் விடுத்திருந்த கோரிக்கையை செயற்படுத்தியிருந்தால் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றிருக்காது எனவும் இதனை உடன் அமுல்படுத்தினால் மாணவர்களின் பகிடிவதையை முற்றாக நிறுத்தப்படும் எனவும் பேராசிரியர் அத்துல சேனாராத்தினா ஊடகங்களுக்கு டிச. (17) கூறியுள்ளார்.

செப்.14 இங்கு கலைப்பிரிவு மாணவர்கள் உணவகத்தில் சட்டப்பிரிவு மாணவர்களை தாக்கியதில் இரு மாணவர்களும் இரு மாணவிகளும் படுகாயம்.

11 கலைப்பிரிவு மாணவர்கள் இடைநிறுத்தப்பட்டு கலைப்பீடமும் மூடப்பட்டது. நீண்டகாலமாகவே கலைப்பிரிவின் ஒரு குழுவினர் ” பகிடிவதை எதிர்ப்பு மாணவர்கள்” என சிலரை வளாகத்தின் உணவகம் போன்ற பொது இடங்களுக்குள் நுழையாது தடுத்துவருவதாகவும்  பேராசிரியர் அர்ஜுன் சம்பத் குறிப்பிட்டார்.

கலைப்பீடாதிபதி கலாநிதி எக்கநாயக்க இவர்களின் பகிடிவதையை எதிர்த்ததால் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு அவரது உருவப்பொம்மையும் எரிக்கப்பட்டது.சிறந்த அழகான பேராதனைப் பல்கலைக்கழகம் சில மாணவர்களின் இச்செயல்களால் மோசமான பல்கலைக்கழகம் எனக்கூறப்படுவதாக பேராசிரியர் திலக விஜய பண்டார கவலை தெரிவித்தார்.

மூடப்பட்ட கலைப்பீடம் 3 மாதங்களால் மாணவர்கள் அளித்த உறுதிமொழிகளால் நவம்பர் 14 மீள ஆரம்பிக்கப்பட்டும் ஒரு மாதத்தில் கலைப்பிரிவு மாணவர்களே தமது உறுதிமொழிகளையும் மீறி டிசம்பர் 10 முன்னாள் துணை வேந்தரையும் மகனையும் தாக்கியுள்ளனர்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கல்வியமைச்சராக இருந்தபோதே 1981 மே 11-12 இங்கு தமிழ் மாணவர்களை துளசி விக்கிரமசிங்க மற்றும் எக்கநாயக்கா தலைமையிலான ஐ.தே.கட்சி ஆதரவு மாணவர் குழு தாக்கியதை மறக்கமுடியாது.தப்பிக்க மாடியிலும்,கூரையிலும் இருந்தும் குதித்த இரு தமிழ் மாணவர்கள் படுகாயமடைந்தனர்.18 சிங்கள மாணவர்கள் குற்றவாளிகளாக காணப்பட்டனர். (13 பேர் மருத்துவர்கள்).

துளசி விஞ்ஞான பீட உதவி விரிவுரையாளராக நீண்ட காலத்தின் பின்னர் நியமனம்.ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் ஜி.என்.பண்டிதரத்தினாவின்  சகோதரரே துணைவேந்தர். கல்வியமைச்சர் ரணில் விக்கிரமசிங்க பல்கலைக்கழக மாணவர்கள் தேர்தலில் தலையிட்டிருந்தார்.(பேராசிரியர் பண்டிதரத்தினா விசாரணை அறிக்கை) (பேராசிரிசர் எஸ். சிவசேகரம் எழுதிய ஓரிரவு நூல்)

ஒக்.26 காலி அக்மீமன ருகுணு தேசிய கல்வியற் கல்லூரியில் இறுதியாண்டு ஆசிரிய மாணவர்கள் 40 பேர் நள்ளிரவு 2 மணிக்கு விடுதிக்குள் மதுபோதையில் புகுந்து புதிய மாணவர்களை பலவந்தமாக நிர்வாணமாக்கி தாக்கியுள்ளனர். ஒக் 28 பட்டம் பெறவிருந்தவர்களே தாக்கியவர்கள். பட்டமளிப்பும் இரத்தானது.ஆசிரிய சேவையில் இவர்களை இணைக்காது பணி நீக்க கல்வியமைச்சர் சுசில் பிரேம ஜயந்த  நடவடிக்கை எடுத்துள்ளார்.

ஒழுக்கமுள்ள மாணவ சமூகத்தை உருவாக்க வேண்டிய ஆசிரியர்களே கேவலமாக செயற்பட்டது இக்கல்லூரியின் நற்பெயருக்கே அவமானம் என பிரதி பீடாதிபதி ஹேவா தேவுந்தரகேவ சரத் தெரிவித்தார். பகிடிவதைகளில் இதுவே மோசமானது.

இதேபோல 1974 இல்  வித்தியலங்கார பல்கலைக்கழகத்தில் கணிதப் பயிற்சி ஆசிரியர்களை பகிடிவதை செய்த மூத்த 12 ஆசிரியர்களை சிறிமாவோ அரசு பதவி நீக்கியதுடன்  தடுக்காத 4 அதிகாரிகளுக்கும்  தண்டப்பணம் அறவிட்டது.பல்கலைக்கழக பகிடிவதைக்கு எதிராக அரசு எடுத்த முதலாவது அதிரடி நடவடிக்கை இதுவே.

பேராதனை பகிடிவதை குறித்த புகார்கள் தமக்கு கிடைத்துள்ளதாகவும்  குற்றம் நிரூபிக்கப்படும் மாணவர்கள் கறுப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டு வேறு பல்கலைக்கழகங்களிலும் படிக்கமுடியாமல் பட்டங்களும் இரத்து செய்யப்பட்டு அரச பணியில் இணையவும் முடியாது என உயர் கல்வி ராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் பதவியேற்றதும் கூறியிருந்தார்.

மாணவர்கள் உரிய காலத்தில் பரீட்சைக்கு தோற்றியதும் பல்கலைக்கழகங்களை விட்டு வெளியேறிவிடவேண்டும். பல மாணவர்கள் பரீட்சை எழுதாது பட்டப்படிப்பு காலம் முடிந்தும் பல வருடங்களாக விடுதிகளில் தங்கி அரசியலில் ஈடுபட்டு காலத்தை வீண்டிக்கின்றனர். இதனை சட்டமாக்கவேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

சகல பல்கலைக்கழகங்களிலும் 4 வருட கல்விக்காலம் முடிந்தும் விடுதிகளில் தங்கியிருக்கும் மாணவர்களை உடனடியாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்குமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பந்த் அமரதுங்க  துணைவேந்தர்களுக்கும் அறிவித்துள்ளார்.

90 வீதமானவர்கள் 4 வருடங்களில் பட்டப்படிப்பை முடிக்கும்போது ஏனையோருக்கு 3 வருடங்களில் படிப்பை முடிக்கவே வாய்ப்பு அளிக்கப்படுகிறது.

இனிமேல் 3 வருடங்களில் வெளியில் இருந்தே பரீட்சைக்கு தோற்றுவதுடன் சகல கட்டணங்களையும் செலுத்தி படிப்பை முடிக்க வேண்டும். 5 வீதமானோர் படிப்பு காலம் முடிந்தும் விடுதிகளில் தங்கியிருப்பது சட்டவிரோதம். 4 வருடங்களில் பட்டம் பெறாவிடில் தங்கமுடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

பேராதனைப் பல்கலைக்கழக வரலாற்றில் பகிடிவதையால் ஒரு மாணவியும் ஒரு மாணவனும் மணமானார்கள். 1 வது சம்பவம் 1975 இல் விவசாய பீட மாணவி ரூபா ரட்னசீலியின் ( 22 வயது) பெண் உறுப்பில் மெழுகுதிரியை செலுத்த முயலவே தப்பிக்க மாடியிலிருந்து குதித்து ஊனமுற்றார்.இதில் ஈடுபட்டவர்கள் இன்றும் பல துறைகளில் உயர் பதவிகளில் இருப்பதாகவும் விசாரணைகள் மூடி மறைக்கப்பட்டதாகவும் சக மாணவி ஒருவர் கூறினார்.

நாட்டுக்கும் சிங்கள இனத்துக்கும் அவமானம் பெண் பிரதமரின் ஆட்சியில் மாணவிகளுக்கு பாதுகாப்பில்லை என ஐ.தே.க.எம்.பிக்கள் கண்டித்தனர்.

இதுபோன்ற துயர நிகழ்வுகள் எதிர்காலத்தில் இடம்பெறாது என பிரதமர் சிறிமாவும் கல்வி அமைச்சர் பதியுதீன் மஹ்முத்தும் உறுதியளித்திருந்தனர்.

ரூபா ரட்னசீலி 3 ஆண்டுகள் சிகிச்சையின் பின் சக்கர நாற்காலியில்  நடமாடி வேதனை தாங்கமுடியாது 2002 இல் கிணற்றில் விழுந்து  தற்கொலை செய்துகொண்டார்.

2 வது சம்பவம் 1997 ஒக்.06 இல் பொறியியல் பீட  மாணவன் வரப்பிரகாஷ் 8 மூத்த தமிழ் மாணவர்களின் 500 தடவைகள் தோப்புக்கரணம் பகிடிவதையால்  சிறுநீரகம் பாதித்து மயங்கி விழுந்து ஒக்.26 இல் மரணமானார். தமிழ் பயங்கரவாத மாணவர்களின் பகிடிவதை என தெற்கில் கேலி செய்தனர்.

அன்றைய உயர் கல்வி அமைச்சர் ரிச்சரட் பத்திரான இனிமேல் பகிடிவதை இடம்பெறாது தடுக்க குற்றவாளிக்கு பிணை வழங்காது  10 வருட சிறைத்தண்டனையை கொண்டுவந்தார்.அவருக்கு பின்னர் வந்த உயர் கல்வி அமைச்சர்களும் பகிடிவதையை முற்றாக ஒழிப்பதாகவே கூறிவருகின்றனர்.

1998 முதல் கண்டி நீதிவான் (Magistrate) நீதிமன்றத்திலும் பின்னர் 2013 கண்டி மேல் நீதிமன்றத்திலும் வரப்பிரகாஷ் மரண விசாரணை நடைபெற்று 1 ஆம் எதிரிக்கு மரணதண்டன விதிக்கப்பட்டு வெளிநாட்டில் உள்ள அவரை சர்வதேச பொலிஸாரின் உதவியுடன் கைது செய்யுமாறு  நீதிபதி மணிலால் வைத்தியதிலக உத்தரவிட்டிருந்தார்.இத்தீர்ப்பை எதிர்த்து எதிரி மேன்முறையீடு செய்திருந்தார்.

கடந்த ஒக். 28 மேன் முறையீட்டு நீதிமன்றத்தினால் இத்தீர்ப்பு ஊர்ஜிதம் செய்யப்பட்டது.வரப்பிரகாஷ் மரணித்து 25 வருடங்களால் இத்தீர்ப்பும் வழங்கப்பட்டுள்ளது. பகிடிவதைக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட பேராதனை பல்கலைக்கழக முதல் தமிழ் மாணவன்.

ஆண்டு தோறும் 2,000 மாணவர்கள் பகிடிவதையால் பல்கலைக்கழக கல்வியை கைவிடுவதாக கல்வி அமைச்சு புள்ளி விபரங்கள் கூறுகின்றன.கடந்த 15 வருடங்களில் 9,834 மாணவர்களும்  பாலியல் துன்புறுத்தல்களால் 9,900 மாணவிகளும் படிப்பை கைவிட்டுள்ளனர்.

1977 முதல் ஐக்கிய தேசியக் கட்சியின் 17 வருட ஆட்சி, சந்திரிகா,ராஜபக்ச ஆட்சியிலும் யுத்தத்தில் அக்கறை காண்பித்தனரே தவிர பகிடிவதை பிரச்சினையை கணக்கெடுக்கவில்லை. கோட்டாபய ஜனாதிபதியானதும் இதனை முற்றாக ஒழிப்பதாக கூறியிருந்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 2017 இல் பிரதமராக இருந்தபோது பகிடிவதையை ஒழிப்பது குறித்து அலரி மாளிகையில் நடாத்திய கூட்டத்தில் உயர் கல்வியமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல, துணை வேந்தர்கள்,பல்கலைக்கழக மானியங்கள் ஆணக்குழு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

கடந்த ஒக்.24 ஜனாதிபதி ரணில் றோயல் கல்லூரி அதிபர்,மாணவர்களை சந்தித்தபோதும் பகிடிவதையால்  மன உடல் உளைச்லுக்கு உள்ளாகும் மாணவர்களின் தொகை அதிகரிப்பதாகவும் பகிடிவதையை முற்றாக ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் எனவும் கூறியிருந்ததை செயற்படுத்தி மாணவர்கள் எதிர்காலத்தில் சுதந்திரமாக கற்பதற்கு நடவடிக்கை எடுப்பாரா!

ம.ரூபன்.