கொழும்பு மாநகர சபையில் வரவு- செலவுத் திட்டம் சமர்ப்பிப்பு

183 0

கொழும்பு மாநகர சபையின் 2023ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம்  மேயர் ரோசி சேனநாயக்கவினால் செவ்வாய்க்கிழமை (டிச. 20) காலை 10.30 மணிக்கு சபையில் சமர்ப்பித்து உரையாற்றினார்.

அதன் பிரகாரம் கொழும்பு மாநகர சபையின் 2023ஆம் ஆண்டுக்கான வருமானம் 1785 கோடியே 49 இலட்சத்து 91000 ரூபாவாக  எதிர்பார்க்கப்படும் நிலையில் செலவீனமாக 1785 கோடியே 40 இலட்சத்து 87350 ரூபா  கணிப்பிடப்பட்டுள்ளது. இதில் மூலதன சொத்துக்கள் கைப்படுத்தல் மற்றும் நகரின் அடித்தள வசதிகளை அபிவிருத்தி செய்வதற்காக 4818.64 மில்லியன் ரூபா மூலதன செலவுகள் என திட்டமிடப்பட்டுள்ளன.

அத்துடன்  இந்த வரவு-செலவுத் திட்டத்தில் தற்போதுள்ள பொருளாதாரநெருக்கடியால் துன்பப்படும் மக்களுக்கு அதிக சுமையை ஏற்றக்கூடாது என்பதில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன் வர்த்தக சமூகத்தின் வர்த்தக நடவடிக்கைகள் தடைப்படுமாறு நிலுவை வரி மற்றும் கடைகளுக்கான வாடகை   அறவிடலை மேற்கொள்ளாது அவர்கள் செலுத்த வேண்டிய  நிலுவைப் பணத்தை அறவிடும்போது சாதாரண முறையை பின்பற்றவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதேவேளை, மாநகர சபையின் வருமானத்தை அதிகரிப்பதற்கான முன்மொழிவுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி சட்டத்திணைக்களம் பல்வேறு  ஒப்பந்தங்களுக்காக அறவிடும் கட்டணத்தை திருத்துதல்,வர்த்தக நிலையங்களில் கழிவுகள் சேகரிப்பதற்காக அறவிடும் கட்டணத்தை அதிகரித்தல், அனுமதியின்றி வீதிகளின் அருகே நிறுத்திவைக்கப்படும் வாகனங்களை அகற்றுதல். அதற்காக கட்டணம் அறவிடல், வெற்றுக்காணிகள் மதிப்பீட்டில் 2 வீத உச்சளவின் கீழ் கட்டணம் அறவிடல், நடைபாதைக்கடைகள், மணிக்கடைகளுக்கான மாதாந்த வாடகையை திருத்துதல், நகர திட்டமிடல் பிரிவின் உபபிரிவுகள் மற்றும் ஒன்றிணைத்தல் கட்டணங்களை அதிகரித்தல், அப்பிரிவுகளினால் வழங்கப்படும் அனைத்து விண்ணப்பங்களுக்காகவும் அறவிடும் பணத்தை இரு மடங்காக அதிகரித்தல், சேவைக்கட்டணத்துக்கு அறவிடும் கட்டணத்தை 10 வீதம் அதிகரித்தல்.

2023 மேமாதம் முதல் நடைமுறைக்கு வரும் வகையில் வாகனங்கள் தரிப்புக்கட்டணத்தை அதிகரித்தல், மாயனங்களில் தகனம் செய்தல், நல்லடக்கம் செய்தல், கட்டணத்தை தவிர ஏனைய அறவிடல்களை அதிகரித்தல், உத்தரவற்ற இடங்களை பயன்படுத்துதல் தொடர்பாக கட்டணம் அறவிடல், ஒரே இடத்தில் அனைத்து வகை இறைச்சி வகைகளையும் மீன்களையும் விற்பனை செய்யும்   சிறப்பு அங்காடிகளுக்காக அறவிடும் கட்டணத்தை அதிகரித்தல் ஆகிய முன் மொழிவுகள்  அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த வரவு-செலவுத் திட்டத்தில் மாநகரசபையின் செலவுகள் 8 வேலைத்திட்டங்களின் கீழ்  உள்ளடக்கப்பட்டுள்ளன. இதில் மக்கள் சுகாதார திணைக்களத்தின் கீழ் காணப்படும் 7 பிரிவுகளுக்காக 754.94 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக டெங்கு மற்றும் பிற நோய்கள் கட்டுபாட்டு நடவடிக்கைகளுக்காக 144.03 மில்லியன் ரூபாவும் தாய்மார் மற்றும் குழந்தை நலன் நடவடிக்களுக்காக 229.35 மில்லியன் ரூபாவும் சுகாதாரம் மற்றும் கல்விக்காக 46.20 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு நகரில்  வாழும் மக்களின் நோய்வாய்ப்படும் தன்மைகளுக்கு இலவசமாக மேல்நாட்டு வைத்திய வசதிகளை பெற்றுக்கொடுக்கும் நோய் நிவாரண திணைக்களத்திற்கு 312.76 மில்லியன் ரூபாவும் சுதேச வைத்திய திணைக்களத்திற்கு 155  மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேவேளை கட்டிட நிர்மாணங்களுக்காக 1919.5 மில்லியன் ரூபாவும் செயற்திட்ட பிரிவிற்கு 3030.88 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கொழும்பு மாநகரசபை உறுப்பினர்கள்  ஒவ்வொருவருக்கும் 4 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் இந்த தொகை 3மில்லியனாகவே இருந்தது. அத்துடன் குறை வருமானம் கொண்ட மக்களின் வசதிகளை மேற்கொள்வதற்காக 503 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது. வறுமை நிவாரணம் வழங்குவதற்காக 180 மில்லியன் ரூபாவும்  கல்வி உதவிகளுக்காக 250 மில்லியன் ரூபாவும் சுயதொழில் உதவிக்காக 170 மில்லியன் ரூபாவும்  மாநகர வீதிகள் புனரமைப்பிற்காக 667.96 மில்லியன் ரூபாவும்    ஒதுக்கப்பட்டுள்ளது.