சென்னையில், 102 இரட்டையர்கள் ஒரே மேடையில் தோன்றி அசத்தல்

278 0

சென்னையில், 102 இரட்டையர்களையும் ஒரே இடத்தில் பார்த்தது கண்கொள்ளா காட்சியாக இருந்தது. ஆசிரியர்களும், மற்ற மாணவர்களும் இதனை பார்த்து வியப்பில் ஆழ்ந்தனர்.

இரட்டை குழந்தைகள் இவர்களை ஒன்றாக பார்க்கும் போது உள்ளத்தில் ஒருவித உற்சாகம் எழும்.

ரெண்டு பேரும் அச்சு அசலாக ஒண்ணு போலவே இருக்காங்களே! என்று ஆச்சரியப்படுவோம். அந்த அளவுக்கு ஒருவரையொருவர் அடையாளம் காண முடியாத அளவுக்கு இரட்டையர்களின் தோற்றம் இருக்கும்.

இப்படி பிறக்கும் இரட்டை குழந்தைகளில் சில நேரங்களில் இருவரின் குணாதிசயங்களும் ஒன்று போல இருக்கும். அதே நேரத்தில் மாறுபட்ட எண்ணங்களும் அவர்களின் மனதில் சில நேரங்களில் ஏற்படும்.

இரட்டை குழந்தைகளை ஒன்று போல அழகுபடுத்தி, உடைகளை அணிவித்து பெற்றோர்கள் ரசிப்பார்கள். இப்படி இரட்டையர்களை பற்றி செல்லமாக சொல்லிக்கொண்டே செல்லலாம்.

இன்று சர்வதேச இரட்டையர் தினமாகும். இதையொட்டி சென்னை கொளத்தூர் எவர்வின் பள்ளியில் இன்று இரட்டையர்கள் அனைவரையும் ஒருங்கிணைக்கும் நிகழ்ச்சி நடந்தது.

அந்த பள்ளியில் படித்த 102 இரட்டையர்களும் ஒரே மேடையில் அமர வைக்கப்பட்டனர். 1-ம் வகுப்பில் இருந்து 12-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகள் ஒரே இடத்தில் கூடி அசத்தினர். அனைவரும் அருகருகே அமர்ந்து உற்சாகமாக போட்டோவுக்கு போஸ் கொடுத்தனர்.

102 இரட்டையர்களையும் ஒரே இடத்தில் பார்த்தது கண்கொள்ளா காட்சியாக இருந்தது. ஆசிரியர்களும், மற்ற மாணவர்களும் இதனை பார்த்து வியப்பில் ஆழ்ந்தனர்.