குழந்தை ரித்திகா கொலை வழக்கில் கைதான சேகருக்கு 15 நாள் காவல்

260 0

எண்ணூர் குழந்தை ரித்திகா கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சேகர் என்பவருக்கு 15 நாள் நீதிமன்ற காவல் அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த 18-ஆம் தேதி ரித்திகா காணாமல் போன நிலையில், அந்தக் குழந்தையின் உடல் மறுநாள் திருவொற்றியூர் குப்பைக் கிடங்கிலிருந்‌து கண்டெடுக்கப்பட்டது.
காவல்துறையினர் நடத்திய விசாரணையில் நகைக்காக ரித்திகாவை எதிர்வீட்டுப் பெண் ரேவதி கொன்றதாக தகவல் வெளியானது. நகைக்காக அந்த குழந்தை கொல்லப்பட்டதாக போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதனிடையே ரேவதியின் தந்தை, பாலியல் வன்கொடுமை செய்து‌ ரித்திகாவை கொன்றதாக தகவல் பரவியது. ரேவதியின் தந்தை சேகரும் உடனடியாக கைது செய்யப்பட்டார்.
பின்னர், திருவொற்றியூர் நீதிமன்றத்தில் சேகரை போலீசார் ஆஜர்படுத்தினர். சேகருக்கு 15 நாள் நீதிமன்ற காவல் அளித்து நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து சேகர் புழல் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
வழக்கின் விவரம்:-
எண்ணூர், சுனாமி குடியிருப்பு 26-வது பிளாக்கில் வசித்து வருபவர் பழனி. இவரது 3 வயது மகள் ரித்திகா. கடந்த சனிக்கிழமை வீட்டில் இருந்த ரித்திகா திடீரென மாயமானாள். இந்த நிலையில் ஞாயிற்றுக் கிழமை காலை திருவொற்றியூர், மணலி சாலையில் உள்ள குப்பை கிடங்கில் சிறுமி ரித்திகா கொலை செய்யப்பட்டு கிடந்தாள்.
அவளது வாய்க்குள் துணி திணிக்கப்பட்டு இருந்தது. வாயும் துணியால் கட்டப்பட்டு காணப்பட்டது. சிறுமி கொலையுண்டது பற்றி அறிந்ததும் அப்பகுதியை சேர்ந்த பொது மக்கள் மணலி விரைவு சாலையில் மறியலில் ஈடுபட்டனர். உடனடியாக காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டது.
ரித்திகா ஒரு பவுனில் தங்க செயின், கம்மல், வெள்ளி கொலுசு, வெள்ளிக் கொடி அணிந்து இருந்தாள். அவளது உடல் மீட்கப்பட்ட போது நகைகள் இல்லை. இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சந்தேகத்தின் அடிப்படையில் பக்கத்து வீட்டு பெண் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்.