மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாடசாலை ஆசிரியர் ஒருவரை கடத்திய சந்தேக நபரை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு மாவட்ட பதில் நீதவான் எஸ்.தியாகேஸ்வரன் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 6 ஆம் திகதி காத்தான்குடியைச் சேர்ந்த ஆசிரியரை காத்தான்குடி முகைதீன் மெத்தைப்பள்ளி வீதியில் வைத்து வாடகைக்குப் பெறப்பட்ட வேன் ஒன்றில் கடத்திச் சென்று காங்கேயனோடையிலுள்ள ஈரான் சிட்டி எனும் இடத்தில் குறித்த சந்தேக நபர் மறைத்து வைத்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஏ.எஸ்.றஹீம் தலைமையிலான பொலிஸார் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையின் மூலம் கடத்தப்பட்ட ஆசிரியர் கண்டுபிடிக்கப்பட்டதுடன் சந்தேக நபரும் கைது செய்யப்பட்டார்.
மருந்துப் பொருட்களின் விற்பனை பிரதிநிதியாக பணியாற்றும் 27 வயதுடைய காத்தான்குடியைச் சேர்ந்த சந்தேக நபரே இவ்வாறு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பித்தக்கது.

