வரி அதிகரிப்பு,தேசிய வளங்களை விற்றலே ஜனாதிபதியின் பொருளாதாரக் கொள்கையாகவுள்ளது

180 0

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் அவர் தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிரான மக்களாணையை இன்று ஒன்றுப்படுத்துவோம்.

வரி அதிகரிப்பு,தேசிய வளங்களை விற்றல் இதுவே ஜனாதிபதியின் பொருளாதாரக் கொள்கையாக உள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.

எதிர்க்கட்சி தலைவர் காரியாலயத்தில் சனிக்கிழமை (10) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

ஐக்கிய மக்கள் சக்தியின் இரண்டாவது வருட நிறைவு கூட்டம் இன்று பொரள்ளை கெம்பல் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

இரண்டு பேரணிகளை சிறப்பாக நடத்துவோம்.நாட்டு மக்கள் மீது கரிசணை கொள்ளாது தன்னிச்சையாக செயற்படும் அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் பலம் எவ்வாறு உள்ளது என்பதை அரசாங்கத்திற்கு எடுத்துரைப்போம்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும்,எமக்கும் இடையில் தனிப்பட்ட வெறுப்பு ஏதும் கிடையாது,பொருளாதாரத்தை நெருக்கடிக்குள்ளாக்கிய ராஜபக்ஷர்களை தொடர்ந்து பாதுகாப்பதற்காக அவர் நாட்டு மக்களை நெருக்கடிக்குள்ளாக்கி,ஜனநாயகத்திற்கு எதிராக செயற்படுகிறார்.

பல்வேறு எதிர்பார்ப்புக்கு மத்தியில் 2015 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கம் தோற்றுவிக்கப்பட்டது.அரச நிதியை மோசடி செய்தவர்களுக்கு தண்டனை வழங்கப்படும் என மக்களுக்கு வாக்குறுதி வழங்கினோம்,ஆனால் நல்லாட்சியில் பிரதமர் பதவி வகித்த ரணில் விக்கிரமசிங்க ஊழல் மோசடியாளரகளுடன் டீல் அமைத்துக் கொண்டார்.

இவரது செயற்பாடுகளினால் நாட்டு மக்கள் நல்லாட்சி அரசாங்கத்தை வெறுத்தார்கள்.இதன் பின்னணியில் தான் பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கம் தோற்றம் பெற்றது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ மற்றும் பொதுஜன பெரமுனவின் பலவீனமான நிர்வாகத்தை நாட்டு மக்கள் இரண்டரை வருட காலத்திற்குள் முடிவுக்கு கொண்டு வந்தார்கள்.தற்போது இவர்களின் பிரநிதியாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவி வகிக்கிறார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு மக்களாணை கிடையாது என்பதை மக்கள் 2020 ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் ஊடாக உறுதிப்படுத்தியுள்ளார்கள்.

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதாக குறிப்பிட்டுக் கொண்டு அவர் நாட்டு மக்களை நெருக்கடிக்குள்ளாக்குகிறாரே தவிர பிரச்சினைகளுக்கு தீர்வு காணவில்லை.வரி அதிகரிப்பு,தேசிய வளங்களை விற்றல் இவரது பொருளாதார கொள்கையாக உள்ளது.பொருளாதார மீட்சிக்கான சிறந்த திட்டங்களை இன்று பகிரங்கப்படுத்துவோம் என்றார்.