மக்கள் கூட்டணியாக உதயமாகி, தற்போது தடம் மாறி பயணிக்கும் தமிழ் முற்போக்கு கூட்டணியில் இருந்து எங்கள் தளபதி வேலுகுமாரை நீக்கிவிட்டதாக தலைவர் என கூறிக்கொள்ளும் சிலர் அறிக்கை விட்டுள்ளனர்.
ஆனால், மக்கள் மனங்களில் இருந்து வேலுகுமாரை ஒருபோதும் நீக்க முடியாது என்பதை இவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று கண்டி மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ஜீவன் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைமைத்துவம் தன்னிச்சையாக செயற்படுகிறது. தனது தான்தோன்றித்தனமான முடிவுகளை கூட்டணி முடிவாக காட்டிக்கொள்வதற்கு முற்படுகிறது.
ஜனநாயகம் என கூறிக்கொண்டாலும், உள்ளே நடப்பது சர்வாதிகாரம் தான். இப்படி அநீதி நடக்கும்போதும், கூட்டணி தடம் மாறி பயணிக்கும்போதும் அதை சுட்டிக்காட்டி, நேர்வழிப்படுத்தும் பொறுப்பு வேலுகுமார் எம்.பிக்கு இருக்கின்றது. அதனை செய்வதற்கு அவர் முற்பட்டார்.
ஆனாலும், இதை வேறு விதத்தில் அர்த்தப்படுத்துவதற்கு ‘உத்தமர்’ என கூறிக்கொள்ளும் சில அரசியல் வியாபாரிகள் முயற்சிக்கின்றனர்.
முழு பூசணிக்காயையும் சோற்றில் மறைப்பது போல, மழுப்பல் அறிக்கைகளை விடுக்கின்றனர்.
நாம் ஏமாளிகள் என எண்ணி, ஏமாற்ற நினைத்தால் எஜமான் என்றாலும் விடமாட்டோம். கண்டி மண்ணில் பலமுனை சூழ்ச்சிகளை முறியடித்து வெற்றி கண்ட அரசியல் வீரத்தளபதி தான் எங்கள் வேலுகுமார்.
கண்டி மண்ணில் மண்ணை கௌவியவர்களுக்கு இது புரியும் என நினைக்கின்றேன். புரியாவிட்டால், எதிர்காலத்தில் விளக்கமாக பாடமெடுக்கவும் நாம் தயார்.
வேலுகுமாரை எங்கிருந்தும் எவராலும் வெளியேற்ற முடியாது. தவறான இடத்தில் அவர் இருப்பதும் இல்லை என்றார்.

