அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினர் பதவியை கூட்டமைப்பினர் அதிகார பகிர்வு விவகாரத்திற்கு பயன்படுத்திக் கொள்வார்கள் என்பதால் கூட்டமைப்பின் பெயர் பரிந்துரைக்கு எதிர்ப்பு தெரிவித்தோம். இவ்விடயத்தில் இனவாதம் கிடையாது என பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (09) விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
அரசியலமைப்பு பேரவைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் பெயரை பரிந்துரைத்தனர். மறுபுறம் பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயல்படும் தரப்பினர் எனது பெயரை பரிந்துரைத்தார்கள்.
இதனை பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் பெரும்பான்மை வாதம்,சிறுபான்மை சமூகத்திற்கு எதிரான செயற்பாடு, சிறுபான்மை சமூகத்தினருக்கு இடமளிக்க சிங்களவர்கள் இடமளிக்க மறுக்கிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.இது முற்றிலும் தவறானது.
தமிழ் தேசிய கூட்டமைப்பினரால் பரிந்துரைக்கப்பட்ட நபர் எங்களை பிரதிநிதித்துவப்படுத்த மாட்டார் என்ற காரணத்தினால் எமது தரப்பில் இருந்து பரிந்துரை முன்வைக்கப்பட்டது.அதனை இந்த வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக நன்கு விளங்கிக் கொள்ள முடிந்தது.
அதிகார பகிர்வு தொடர்பில் ஜனாதிபதி வாக்குறுதி வழங்கியதும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மீதான வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.
ஆகவே அரசியலமைப்பு பேரவைக்கு சென்று இவர்கள் எமது நிலைப்பாட்டை பிரதிநிதித்துவப்படுத்தாமல்,அதிகார பகிர்வு விவகாரத்திற்கு அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினர் அதிகாரத்தை பயன்படுத்துவார்கள் என்ற காரணத்தினால் பெரும்பாலான உறுப்பினர்கள் கூட்டமைப்பின் பெயர் பரிந்துரைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஆகவே இனவாத காரணிகளை முன்னிலைப்படுத்தி நாங்கள் அரசியலமைப்பு பேரவைக்கான உறுப்பினர் நியமனத்தில் கூட்டமைப்பின் பெயர் பரிந்துரையை எதிர்க்கவில்லை.கூட்டமைப்பின் செயற்பாடுகள் மீது நம்பிக்கை கொள்ள முடியாது என்றார்.

