உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை 2022-ம் ஆண்டின் சிறந்த நபர் என டைம்ஸ் இதழ் கவுரவித்துள்ளது. அவருக்கு ‘உக்ரைனின் உத்வேகம்’ என்று புகழாரம் சூட்டியுள்ளது.
ஒவ்வோர் ஆண்டும் அரசியல், இலக்கியம், சமூக சேவை முதலானவற்றில் சிறந்து விளங்கும் ஒருவரை, அந்த ஆண்டில் சிறந்த நபராக அட்டைப் படத்தில் வருடத்தின் இறுதியில் டைம் இதழ் வெளியிட்டு கவுரவித்து வருகிறது. அந்த வகையில் 2022-ஆம் ஆண்டின் சிறந்த நபராக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை டைம் இதழ் தேர்வு செய்துள்ளது.
இதுகுறித்து டைம் இதழ் தனது ட்விட்டர் பக்கத்தில், 2022-ஆம் ஆண்டின் சிறந்த நபர் ஜெலன்ஸ்கி. அவர் உக்ரைனின் உத்வேகம். ஒரு போர்க்காலத் தலைவராக ஜெலென்ஸ்கியின் வெற்றி, அவரது தைரியத்தை நம்பியிருக்கிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
TIME’s 2022 Person of the Year: Volodymyr Zelensky and the spirit of Ukraine #TIMEPOY https://t.co/06Y5fuc0fG pic.twitter.com/i8ZT3d5GDa
— TIME (@TIME) December 7, 2022
ரஷ்யா – உக்ரைன் போர்: ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய முடிவு செய்த உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி இறுதியில் போர் தொடுத்தது. உக்ரைனின் பல பகுதிகள் தற்போது ரஷ்ய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன. உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஏராளமான நவீன ஆயுதங்களை வழங்கியுள்ளன. இவற்றை வைத்து, உக்ரைன் வீரர்கள், ரஷ்ய ராணுவத்துக்கு எதிராக தாக்குதல்களை நடத்தி இழந்த பகுதிகளை மீட்டு வருகின்றனர். போர் காரணமாக உக்ரைனில் லட்சக்கணக்கான மக்கள் அண்டை நாடுகளுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் ரஷ்யாவால் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

