கைதிகளின் செயல்பாடுகளை கண்காணிக்க சிறை காவலர் சீருடையில் பொருத்தும் நவீன கேமரா அறிமுகம்

83 0

சிறைகளில் கைதிகளின் செயல்பாடுகளைக் கண்காணிக்க சிறைக் காவலர்களுக்கு சீருடையில் பொருத்தும் நவீன கேமரா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள 9 மத்திய சிறைகள், 5 மகளிர் சிறப்பு சிறைகள் உள்ளிட்டவற்றில் விசாரணை கைதிகள், தண்டனை கைதிகள் எனசுமார் 15 ஆயிரம் பேர் அடைக்கப்பட்டுள்ளனர். வெளிநாட்டை சேர்ந்த கைதிகளும் சிறைகளில் உள்ளனர்.

இவர்களின் நடவடிக்கைகளை கண்காணிக்க சிறை வளாகத்தில் ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. எனினும் சில நேரங்களில் நடைபெறக்கூடிய கைதிகளுக்கு இடையேயான மோதல், கைதிகள் மற்றும் காவலர்களுக்கு இடையேயான வாக்குவாதம் போன்றவற்றை ஆடியோவுடன் கூடிய வீடியோவாக பதிவு செய்ய முடியாத நிலை இருந்தது.

இதற்கு தீர்வு காணும் வகையில் சிறைக் காவலர்களுக்கு சட்டையில் அணிந்து கொள்ளக் கூடிய கேமராக்களை (Body Worn Cameras) வழங்கசிறைத் துறை நிர்வாகம் முடிவு செய்தது. இதற்காக 50 கேமராக்களுக்கும், அதற்கான சர்வர் நிறுவுவதற்கும், அரசு ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தது. அதன்படி முதல் கட்டமாக புழல் மத்திய சிறையில் காவலர்களின் சீருடையில் அணிந்துகொள்ள 5 கேமராக்கள் முதல் கட்டமாக நேற்று வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் சிறைத்துறை டிஐஜிக்கள் கனகராஜ், முருகேசன், சிறைத்துறை அதிகாரிகள் நிகிலா ராஜேந்திரன், கிருஷ்ணராஜ் உட்பட பலர் கலந்துகொண்டனர். இத்திட்டம் படிப்படியாக அனைத்து சிறைகளுக்கும் விரிவாக்கம் செய்யப்படவுள்ளது.