இலகு ரக புகையிரத சேவையை இரத்து செய்தமையால் 5,978 மில்லியன் ரூபா நஷ்டம்

158 0

ஜப்பானின் கடன் திட்டத்தின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட கொழும்பு – மாலம்பே இடையிலான இலகு ரக புகையிரத சேவையை, இலங்கை அரசாங்கம் தன்னிச்சையாக இரத்து செய்தமையின் காரணமாக 5,978 மில்லியன் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக இது தொடர்பான புதிய கணக்காய்வு அறிக்கையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நஷ்டத்தினைக் கோரி குறித்த ஜப்பான் நிறுவனம் சர்வதேச நீதிமன்றத்தை நாடினால், அதனை விட பன்மடங்கு தொகையை மீள செலுத்த வேண்டிய நிலைமை இலங்கைக்கு ஏற்படும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொழும்பில் ஏற்படும் போக்குவரத்து நெறிசலைக் குறைப்பதற்காக மக்களுக்கு சிறந்த போக்குவரத்து வசதியை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக கடந்த 2016 ஆம் ஆண்டு ஜப்பான் கடன் திட்டத்தின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட கொழும்பு – மாலம்பேயிற்கிடையிலான இலகுரக புகையிரத சேவையை கடந்த 2020 ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கம் தன்னிச்சையாக இரத்து செய்தது.

இதனால் ஏற்பட்டுள்ள நஷ்டத்திற்காக குறித்த ஜப்பான் நிறுவனம் 5,169 மில்லியன் ரூபா நஷ்டஈடு கோருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறித்த கணக்காய்வு அறிக்கையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இழப்பீட்டைப் பெற்றுக் கொள்வதற்காக ஜப்பான் நிறுவனம் சர்வதேச நீதிமன்றத்தை நாடும் பட்சத்தில் , இழப்பீட்டு தொகையுடன் ஆலோசனைக்கட்டணம் உள்ளிட்டவற்றுடன் பெருந்தொகையை இலங்கை செலுத்த வேண்டியேற்படும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்தோடு இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்ட போது முற்பணமாக 10.4 கோடி ரூபா செலுத்தப்பட்டுள்ளதாகவும் , திட்டம் நிறைவடைந்ததன் பின்னர் அந்த தொகையில் 50 சதவீதத்தினை மீண்டும் செலுத்த வேண்டும் என்ற இணக்கப்பாடு எட்டப்பட்டிருந்ததாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. எவ்வாறிருப்பினும் இத்திட்டம் இடை நடுவில் கைவிடப்பட்டமையின் காரணமாக வழங்கப்பட்ட முற்பணத் தொகை தொடர்பில் நிச்சயமற்ற நிலைமை காணப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜைக்கா நிறுவனத்தினால் 12 ஆண்டுகள் சலுகை காலம் உள்ளடங்களாக , 40 ஆண்டுகளுக்கு 0.1 சதவீத வட்டியுடன் கடனை மீள செலுத்துவதற்கு இணக்கம் காணப்பட்டிருந்தது. எவ்வாறிருப்பினும் இதனை எவ்வித ஏற்றுக் கொள்ளக் கூடிய காரணமும் இன்றி இலங்கை அரசாங்கம் இரத்து செய்துள்ளது. 2020 செப்டெம்பர் 24 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கமையவே இத்திட்டம் இரத்து செய்யப்பட்டது.

இந்த வேலைத்திட்டத்தின் கடன் ஒப்பந்தத்தை இரத்து செய்வது தொடர்பில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்காக இலங்கை அரசாங்கம் விடுத்துள்ள கோரிக்கையை ஜைக்கா நிறுவனம் நிராகரித்துள்ளது. இதன் காரணமாக எதிர்காலத்தில் இழப்பீட்டினை செலுத்த வேண்டிய நிலைமை ஏற்படும் எனவும் குறித்த கணக்காய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.